வெளிப்படை தன்மையில்லாத வளர்ச்சி பணிகள்: முறைகேடுகளை தவிர்க்க அறிவிப்பு அவசியம்
வெளிப்படை தன்மையில்லாத வளர்ச்சி பணிகள்: முறைகேடுகளை தவிர்க்க அறிவிப்பு அவசியம்
ADDED : மார் 29, 2026 10:32 PM
செங்கல்பட்டு:செங்கை மாவட்டத்தில், நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து, பொது மக்கள் அறியும்படி ஊராட்சி தோறும் அறிவிப்பு பலகை வைக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன. நகர மயமாக்கல் காரணமாக, அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஊராட்சிகளில், அடிப்படைக் கட்டமைப்புகள் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில், ஊராட்சி தோறும் நடந்து முடிந்துள்ள வளர்ச்சிப் பணிகள், தற்போது நடந்துவரும் பணிகள் குறித்த விபரங்களை மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதனால், வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஆண்டு தோறும் பலகோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கை மாவட்ட ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் 30க்கும் மேற்பட்ட திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, பல்வேறு பணிகள் நடக்கின்றன.
அதன்படி, சாலைகள் புனரமைப்பு, 'கல்வெர்ட்' அமைத்தல், குடிநீர் வசதி, வடிகால் அமைத்தல் உட்பட 40க்கும் மேற்பட்ட பணிகள் நடக்கின்றன.
இந்த பணிகள் எந்தத் திட்டங்களின் கீழ், எவ்வளவு மதிப்பீட்டில் நடந்து வருகின்றன என்ற விபரங்களை, மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
ஒரு தெருவில் சாலை அமைக்கப்படுகிறதென்றால், அதற்கு எந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அந்த பணியின் ஒப்பந்ததாரர் யார் என்ற விபரத்தை பொதுமக்கள் அறியும்படி, ஊராட்சி அலுவலகத்திலும், பணி நடைபெறும் இடத்திலும் அறிவிப்பு பலகை வாயிலாக தெரிவிக்க வேண்டும்.
தவிர, ஒரு பணிக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடனே, அது குறித்த விபரங்களை மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களின் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எங்கே வெளிப்படை தன்மை இல்லையோ, அங்கே முறைகேடுகள் தாராளமாக நடக்கும்.
எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில், செங்கை மாவட்ட, ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி விபரங்களை, இணையத்தில் வெளியிட வேண்டும்.
தவிர, இதுவரை முடிந்துள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அறிவிக்க வேண்டும். நிதி ஒதுக்கியும் துவக்கப்படாத பணிகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
