/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓராண்டாக தொடர்ந்து இயங்கிய அணுமின் நிலைய யூனிட் - 2
/
ஓராண்டாக தொடர்ந்து இயங்கிய அணுமின் நிலைய யூனிட் - 2
ஓராண்டாக தொடர்ந்து இயங்கிய அணுமின் நிலைய யூனிட் - 2
ஓராண்டாக தொடர்ந்து இயங்கிய அணுமின் நிலைய யூனிட் - 2
ADDED : அக் 06, 2024 08:43 PM
கல்பாக்கம்:அணுசக்தி துறையின் பொதுத்துறை நிறுவனமான, என்.பி.சி.ஐ.எல்., எனப்படும் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையம், கல்பாக்கத்தில் இயங்குகிறது.
தலா 220 மெ.வா., மின்திறன் கொண்ட யூனிட் - 1, யூனிட் - 2 ஆகிய மின் உற்பத்தி அலகுகள் உள்ளன. இரண்டிலும், அவ்வப்போது தொழில்நுட்ப பழுது ஏற்படுவதும், பழுது நீக்கத்திற்கு பின் மீண்டும் இயக்கி, மின் உற்பத்தி செய்யப்படுவதும் வழக்கம்.
கடந்த 2018 ஜனவரியில், யூனிட் - 1ல் தொழில்நுட்ப பழுது ஏற்பட்டு, அதை சரிசெய்து மீண்டும் இயக்க இயலாமல், ஆறு ஆண்டுகளாக முடங்கியுள்ளது. யூனிட் - 2 மட்டுமே இயங்கி, மின் உற்பத்தி நடக்கிறது.
கடந்த ஆண்டு, முழுமையான தொழில்நுட்ப சாதனங்கள் பராமரிப்பைத் தொடர்ந்து, அக்., 5ல் மின் உற்பத்தி துவக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரை, எத்தகைய பழுதும் இன்றி, ஓராண்டிற்கு தொடர்ச்சியாக முழு உற்பத்தி திறனில் இயங்கி, 190.58 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது.
இதுகுறித்து, நிலைய இயக்குனர் சேஷையா கூறும்போது, “இந்த யூனிட், நான்காவது முறையாக, ஓராண்டு தொடர்ந்து இயங்கி சாதனை புரிந்துள்ளது. தொடர்ச்சியான இயக்கம் காரணமாக, ஒழுங்குமுறை விதிமுறைகளின்கீழ், அவசிய பரிசோதனைகளுக்காக, யூனிட்டின் இயக்கம் 10 நாட்கள் நிறுத்தப்படும்,” என்றார்.

