/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா நபர் கைது
/
சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா நபர் கைது
ADDED : பிப் 02, 2025 12:25 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில், கஞ்சா கடத்திவரப்பட்டு விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 31ம் தேதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நசரத்பேட்டை வாகன சோதனைச்சாவடி அருகே, நசரத்பேட்டை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமாக டிராவல்ஸ் சூட்கேசுடன் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரது பேச்சில் முரண்பாடு தெரியவே, சூட்கேசை சோதனை செய்த போது, 10 பாக்கெட்டுகளில், 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, கஞ்சா பாக்கெட்டுகளை அடியில் வைத்து, அதன்மேல் துணிகளை வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
தொடர் விசாரணையில், சூளைமேடு, திருவள்ளுவர்புரம், 1வது தெருவைச் சேர்ந்த அல்ஜியா, 37, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.