/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்களுக்கு...நோட்டீஸ்!:துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
/
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்களுக்கு...நோட்டீஸ்!:துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்களுக்கு...நோட்டீஸ்!:துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
தேர்தல் பயிற்சியில் பங்கேற்காத அலுவலர்களுக்கு...நோட்டீஸ்!:துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை
ADDED : மார் 26, 2024 10:47 PM
சென்னை:ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றாலும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை என்றாலும், 17ஏ பிரிவின்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதன்படி, தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் 39,01,167 வாக்காளர்கள், வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
இதற்காக, 3,719 ஓட்டுச்சாவடி மையங்கள், 944 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளில், 19,396 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு குறித்து, கடிதம் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24ம் தேதி, 16 மையங்களில் நடந்தது. அதில், ஓட்டுப்பதிவு நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், இயந்திரங்களை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில், ஆசிரியர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் 16,000க்கும் மேற்பட்டோர் என, 87 சதவீதம் பேர் பங்கேற்றனர்.
அதேநேரம், 2,500 பேர் என, 13 சதவீதம் பேர், முதற்கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை.
தேர்தல் பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அரசு ஊழியர்கள் அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லை என்றால், 17ஏ பிரிவின் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 3,391 பேரும், ஓட்டுப்பதிவு பி1 அலுவலர்கள் 3,390 பேரும், பி2 அலுவலர்கள் 2,290 பேரும் என, 10,171 பேர் பங்கேற்க உத்தரவிடப்பட்டிருந்தது.
சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கடந்த 24ம் தேதி பயிற்சி வகுப்பு நடந்தது.
இதில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 842 பேரும், ஓட்டுப்பதிவு பி1 அலுவலர்கள் 1,195 பேரும், பி2 அலுவலர்கள் 975 பேரும் என, 3,012 பேர் பங்கேற்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,398 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 6,800 பேரில், 600 பேர் பயிற்சிக்கு வராததால், விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் நடந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பில், 87 சதவீதம் பேர் வருகை தந்துள்ளனர். 13 சதவீதம் பேருக்கு வேறு சில காரணங்களால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், பயிற்சி வகுப்பில் பங்கேற்காதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
விளக்கம் திருப்தி இல்லாதபட்சத்திலும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பிலும் பங்கேற்காதபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தேர்தல் நடத்தை விதிகள் 17ஏ பிரிவின் கீழ், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், அனைவரும் அடுத்தகட்ட பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தலில் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயிற்சியில் பங்கேற்காதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

