/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆர்., பிரதான குழாயில் உடைப்பு செம்மஞ்சேரியில் குடிநீர் பிரச்னை
/
ஓ.எம்.ஆர்., பிரதான குழாயில் உடைப்பு செம்மஞ்சேரியில் குடிநீர் பிரச்னை
ஓ.எம்.ஆர்., பிரதான குழாயில் உடைப்பு செம்மஞ்சேரியில் குடிநீர் பிரச்னை
ஓ.எம்.ஆர்., பிரதான குழாயில் உடைப்பு செம்மஞ்சேரியில் குடிநீர் பிரச்னை
ADDED : ஆக 19, 2025 12:20 AM
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில் பதித்துள்ள பிரதான குழாயில் வால்வு உடைந்ததால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், நான்கு நாட்களாக குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாக்கம், செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 30,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு, குடிநீர் வினியோகம் செய்ய, ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் இருந்து, நுாக்கம்பாளையம் சாலை வழியாக, வாரிய குடியிருப்புக்கு, 300 மற்றும் 400 எம்.எம்., திறன் கொண்ட குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நுாக்கம்பாளையம் சாலையில், கழிவுநீர் மற்றும் வடிகால்வாய் திட்ட பணிகள் நடக்கின்றன. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டும்போது, குழாய் சேதமடைந்துள்ளது. இதனால், குறைந்த அழுத்தத்தில் குடிநீர் செல்கிறது.
இரு தினங்களுக்கு முன், பழுது பார்க்க, குமரன் நகர் பிரதான குழாயின் வால்வு பகுதியை மூடினர். பராமரிப்பு இல்லாததால் வால்வு உடைந்தது. இதனால், மூன்று நாட்களாக குழாய் பழுதை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், குடிநீர் வினியோகம் தடைபட்டது. பிளாக் வாரியாக சொந்த செலவில், தனியார் லாரி குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
உடைந்த வால்வை மாற்றி, புதிய வால்வு பொருத்தியுள்ளோம். அதற்காக, நெம்மேலியில் இருந்து ஓ.எம்.ஆரில் பதித்த பிரதான குழாயில் செல்லும் குடிநீரை நிறுத்த வேண்டி இருந்தது.
அதற்கு, இரண்டு நாட்கள் ஆனது. குழாய் பழுதை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு, பகலாக பணி நடக்கிறது. ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் சீராகும் என நினைக்கிறோம்.
மாநகராட்சி எல்லையானதால், செம்மஞ்சேரியில் லாரி குடிநீர் வழங்குகிறோம். ஊராட்சி எல்லையானதால், பெரும்பாக்கம் வாரிய குடியிருப்புக்கு, லாரி குடிநீர் வழங்க முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த குடிநீரை வினியோகம் செய்துவிட்டோம். மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், குடிநீர் தேவை அதிகரித்தது. சில பிளாக்குகளில், பராமரிப்பு நிதியில் அவர்களே லாரி குடிநீர் வாங்கினர். தேவைக்கு ஏற்ப, நாங்களும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். - - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்