/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் இன்று ஒருவழி போக்குவரத்து
/
மாமல்லையில் இன்று ஒருவழி போக்குவரத்து
ADDED : ஜன 01, 2026 04:59 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், சுற்றுலா வாகனங்கள், இன்று ஒருவழிப்பாதையில் அனுமதிக்கப்படும் என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆங்கில புத்தாண்டு துவக்க நாளான இன்று, அரசு விடுமுறை. இதையடுத்து, சென்னை பகுதியினர், சுற்றுலா பொழுது போக்கிற்கு, மாமல்லபுரத்திற்கு படையெடுப்பர். பெரும்பாலான பயணியர், தனி வாகனங்களில் வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே, கடும் நெரிசல் ஏற்படுகிறது. இன்று வாகனங்கள் குவியும் என்பதால், சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
கிழக்கு கடற்கரை சாலை வழியே வரும் வாகனங்கள், கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, ஐந்து ரதங்கள் சாலை வழியாக, உள்ளே செல்லலாம். கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் ஆகிய இடங்களில் உள்ள, வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம்.
வாகனங்கள் அதிகரித்தால், கல்பாக்கம், வெண்புருஷம் சாலை பகுதிகளில் நிறுத்தலாம். மாநகர் பேருந்துகள், பேருந்து நிலையம் வரை அனுமதிக்கப்படும்.
கூட்டம் அதிகரித்தால், இப்பேருந்துகள், புறவழி சந்திப்பில் நிறுத்தி, அங்கிருந்து பயணியர் உள்ளே செல்ல, 10 ரூபாய் கட்டணத்தில், மினி பேருந்து ஏற்பாடு செய்யப்படும். சுற்றுலா வாகனங்கள், பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை வழியாக மட்டுமே வெளியேற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

