/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
30க்கும் மேற்பட்ட இடங்களில் 'திக்... திக்' இருளில் மேம்பாலங்கள் : விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
/
30க்கும் மேற்பட்ட இடங்களில் 'திக்... திக்' இருளில் மேம்பாலங்கள் : விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
30க்கும் மேற்பட்ட இடங்களில் 'திக்... திக்' இருளில் மேம்பாலங்கள் : விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
30க்கும் மேற்பட்ட இடங்களில் 'திக்... திக்' இருளில் மேம்பாலங்கள் : விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மே 15, 2025 12:35 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்ட 30க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள், உரிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இரவு நேரத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் விபத்து அச்சத்துடனேயே பாலங்களில் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 2019ல் பிரிந்து, 2,945 கி.மீ., பரப்பில், தமிழகத்தின் 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது.
இதில், தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர், நந்திவரம் - - கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.
வெளிவட்ட சாலை
அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஆறு பேரூராட்சிகளும், 359 ஊராட்சிகளை உள்ளடக்கிய எட்டு ஒன்றியங்களும் உள்ளன.
சென்னை மாநகரத்தோடு இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., கிழக்கு கடற்கரை, ஓ.எம்.ஆர்., ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. தவிர, வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, நெல்லிக்குப்பம் சாலை முக்கிய வழித்தடங்களாக உள்ளன.
வாகனங்கள் ரயில் தண்டவாளங்களை கடக்க, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முக்கிய வழித்தடங்களோடு கிராமங்களை இணைக்க, பயணத்தை எளிமையாக்க என, 25 ஆண்டுகளில், செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் தாலுகாவில் 4 மேம்பாலங்கள் மற்றும் திருப்போரூர், மதுராந்தகம் தாலுகா உட்பட பல இடங்களில் 30க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
மணல் திட்டுகள்
இந்த மேம்பாலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவில் எரிவதில்லை. தவிர, மேம்பாலத்தின் ஓரத்தில் குவியும் மணல் திட்டுகள் அகற்றப்படுவதில்லை. இதனால், விபத்து அச்சத்துடனேயே மேம்பாலங்களில் பயணிக்க வேண்டி உள்ளதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு வழி செய்யும் வகையில்தான் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழக நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் வாகன ஓட்டிகளை விபத்து அச்சத்துடனேயே பயணிக்க வைக்கிறது.
குறிப்பாக, இரவு நேரங்களில், மேம்பாலங்களில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் மட்டுமே காட்சி தருகின்றன. கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் ஒளிர்வதே இல்லை.
இதனால், வெளிச்ச குறைபாடு காரணமாக, வாகன ஓட்டிகள், அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை உள்ளது.
நடவடிக்கை
தவிர, மேம்பாலங்களில் படரும் மணல் படுகைகளை, நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்துவதே இல்லை. அப்பகுதிவாசிகள் தொடர் புகார் அளித்தால், ஊடகங்களில் செய்தி வெளியானால் மட்டுமே, மணல் படுகைகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
மேம்பாலங்களில் படர்ந்திருக்கும் மணல் படுகைகள் மீது பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், சறுக்கி விழுந்து காயமடைவது தினமும் அரங்கேறி வருகிறது. தவிர, காற்று பலமாக வீசும்போது, மணல் துகள்கள் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து எளிமை, விபத்தில்லா பயணத்தை உறுதிசெய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள மேம்பாலங்களை சரியான முறையில் பராமரிக்க தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.