/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுச்சேரி பஸ்களில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கம் பயணியர் அவதி
/
புதுச்சேரி பஸ்களில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கம் பயணியர் அவதி
புதுச்சேரி பஸ்களில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கம் பயணியர் அவதி
புதுச்சேரி பஸ்களில் கூட்ட நெரிசல் மாமல்லை, கல்பாக்கம் பயணியர் அவதி
ADDED : அக் 29, 2024 08:05 PM
மாமல்லபுரம்:தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர் செல்லும், மாமல்லபுரம், கல்பாக்கம் பயணியர், அரசு பேருந்து வசதியின்றி அவதிக்குள்ளாகின்றனர்.
மாமல்லபுரம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில், பிற மாவட்ட பகுதியினர் ஏராளமாக வசிக்கின்றனர். பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது இவர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். ரயில், அரசு விரைவு பேருந்து ஆகியவற்றில் முன்பதிவு செய்து, செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து சொந்த ஊர் செல்வது வழக்கம்.
முன்பதிவு செய்யாதவர்கள், அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர். குறிப்பாக, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் செல்வோர், சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்படும் அரசு பேருந்துகளில் புதுச்சேரி சென்று, அடுத்தடுத்த ஊர் என மாறி, மாறி செல்வர்.
தற்போது தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்தே, அவை கூட்ட நெரிசலுடன் வருவதால், மாமல்லபுரம், கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் நிற்பதில்லை.
இப்பகுதிகளில் பயணியர் நீண்டநேரம் காத்திருந்தும், பேருந்து கிடைக்காமல் தவிக்கின்றனர். வெகுநேரத்திற்கு பின், ஏதேனும் ஒரு பேருந்து நின்றாலும், நெரிசலில் முண்டியடித்து ஏறி, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நின்றுகொண்டே பயணம் செய்து அவதிப்படுகின்றனர்.
முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறே திரும்பும்போதும் அவதிக்குள்ளாகின்றனர்.
பண்டிகை காலத்தில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதிகளை ஒருங்கிணைத்து, கல்பாக்கம் பணிமனையிலிருந்து, சிறப்பு பேருந்து இயக்கினால், பயணியர் பயனடைவர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.