/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிரம்பிய தடுப்பணைகள்; கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
/
நிரம்பிய தடுப்பணைகள்; கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
நிரம்பிய தடுப்பணைகள்; கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
நிரம்பிய தடுப்பணைகள்; கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
ADDED : டிச 03, 2024 05:36 AM

மாமல்லபுரம்: வாயலுார் பாலாற்று தடுப்பணை நிரம்பி, உபரிநீர் கடலுக்கு பாய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் வழியே கடக்கிறது. கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் இடையே, வங்கக் கடலில் கலக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆற்றங்கரை பகுதிகளின் விவசாயம், கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றின் நீராதாரமாக, பாலாறு விளங்குகிறது.
ஆற்றில் தடுப்பணை அமைக்க, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், அணுசக்தி துறையின் 32.50 கோடி ரூபாய் பங்களிப்பில், வாயலுார் - கடலுார் ஆற்றுப்படுகையில், 3,937 அடி நீளம், ஐந்தடி உயரம் கொண்ட நீர் செறிவூட்டல் தடுப்பணை, கடந்த 2019ல் கட்டப்பட்டது.
அதே ஆண்டு இறுதியில், அது முழு கொள்ளளவு நிரம்பியது. ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் நிரம்பி, சில மாதங்கள் முழு கொள்ளளவில் நீடிக்கும்.
மார்ச் மாதத்திற்குப் பின், சில அடிகள் குறையும். கோடையில் கனமழை பெய்தால், மீண்டும் முழு கொள்ளளவை அடையும். தற்போதைய கனமழை காரணமாக, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, வாயலுார் தடுப்பணை முழு கொள்ளளவு நிரம்பியுள்ளது.
நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், உபரிநீர் கடலுக்கு பாய்கிறது. நேற்று வினாடிக்கு, 24,250 கன அடி வீதம், உபரிநீர் வெளியேறியதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த, வல்லிபுரம் - ஈசூர் பாலாற்று தடுப்பணையும் முழு கொள்ளளவில் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது.
கடலில் கலந்து வீணாவதை தடுக்க, நல்லாத்துார் பகுதியில், மேலும் ஒரு தடுப்பணை அமைக்க, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
273 ஏரிகள் 'புல்'
செங்கல்பட்டு மாவட்டத்தில், 'பெஞ்சல்' புயல் காரணமாக கனமழை பெய்ததில், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 528 ஏரிகளில், 273 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. இதுமட்டுமின்றி, 197 ஏரிகளில் 76 சதவீதம், 51 ஏரிகளில் 51 சதவீதம், ஏழு ஏரிகளில் 26 சதவீதம் மழைநீர் நிரம்பி உள்ளது. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 620 ஏரிகளில், 275 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.
எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 2,512 குளங்களில், 1,359 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நீர்நிலை பகுதிகளில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.