/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாழடைந்த வனத்துறை கட்டடங்கள் சமூக விரோதிகள் கூடாரமானதால் பீதி
/
பாழடைந்த வனத்துறை கட்டடங்கள் சமூக விரோதிகள் கூடாரமானதால் பீதி
பாழடைந்த வனத்துறை கட்டடங்கள் சமூக விரோதிகள் கூடாரமானதால் பீதி
பாழடைந்த வனத்துறை கட்டடங்கள் சமூக விரோதிகள் கூடாரமானதால் பீதி
ADDED : மே 07, 2025 01:59 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில்வே கேட் - திருக்கச்சூர் செல்லும் சாலையோரம் வலது பக்கம், காப்புக் காடுகள் உள்ளன.
இந்த காப்புக் காடுகளை பராமரிக்கும் வன அலுவலர்கள், காடுகளில் ரோந்து பணி மேற்கொண்ட பின் ஓய்வெடுக்க, மறைமலை நகர் வனப்பகுதியில், இரண்டு கட்டடங்கள் இருந்தன.
கடந்த 1962ல் கட்டப்பட்ட இந்த கட்டடங்கள், நாளடைவில் பயன்பாடு இல்லாமல் சிதிலமடைந்து உள்ளன. மேலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
காதலர்கள் முகாம்
கட்டடங்களில் இருந்த கதவு, ஜன்னல் உள்ளிட்டவை மாயமாகி, செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து, இப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இரவு நேரங்களில் இந்த பகுதியில் அமர்ந்து சிலர் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த தடத்தில் பேருந்து சேவை இல்லாததால், பெரும்பாலானோர் பணிக்கு நடந்து சென்று வருகின்றனர். அதுபோன்ற நேரங்களில், பெண்கள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது.
இந்த கட்டடங்கள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆபத்தை உணராமல் காதலர்களும் தனிமையில் பேச, இந்த கட்டடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இந்த வழியாக சென்ற இரண்டு இளைஞர்களை மர்ம நபர்கள் மடக்கி, வழிப்பறியில் ஈடுபட்டுனர்.
இரவு நேரங்களில் இந்த பகுதியில், சம்பந்தமில்லாத நபர்களின் நடமாட்டம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பாக இருக்கும் இந்ந இரண்டு கட்டடங்களையும் இடித்து அப்புறப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடிதம்
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த கட்டடம் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வனப்பகுதியில் பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த கட்டடத்தை இடிக்க, பொதுப்பணித் துறையினருக்கு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
வனப்பகுதியில் அத்துமீறி நுழைவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். மீறி நுழைபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்த இடத்தில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

