/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் பறிபோனது பரோட்டா மாஸ்டர் உயிர்
/
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் பறிபோனது பரோட்டா மாஸ்டர் உயிர்
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் பறிபோனது பரோட்டா மாஸ்டர் உயிர்
ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அலட்சியம் பறிபோனது பரோட்டா மாஸ்டர் உயிர்
ADDED : செப் 09, 2025 12:50 AM
வேளச்சேரி, விபத்தில் சிக்கிய பரோட்டா மாஸ்டரை, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததே உயிரிழப்பிற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழியர்கள் இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லமணி, 42. வேளச்சேரி, சீனிவாசன் நகரில் தங்கி, பள்ளிக்கரணையில் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணி புரிந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு, வேளச்சேரி ரயில்வே அணுகு சாலையை கடக்க முயன்றார். அப்போது, இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தார். அங்கிருந்தோர் '108' ஆம்புலன்சை வரவழைத்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். செல்லமணி போதையில் இருப்பதாக கூறி, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுத்துள்ளனர்.
பின், அவர் வீட்டிற்கு சென்று துாங்கியுள்ளார். நேற்று காலை, உடன் தங்கியுள்ளவர்கள் செல்ல மணியை எழுப்பியபோது எழும்பவில்லை. உயிரிழந்தது தெரிய வந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாததே, செல்லமணி உயிரிழப்பிற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விபத்து ஏற்படுத்தி தப்பிய இருசக்கர வாகன ஓட்டியை தேடுகின்றனர்.
மேலும், காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்தது குறித்து, ஆம்புலன்ஸ் ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது.