/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு
/
சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு
சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு
சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி நோயாளிகள் தவிப்பு
ADDED : ஆக 27, 2025 12:32 AM
திருப்போரூர்:மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தயார் நிலையில் இருக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, மானாமதி உட்பட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
மானாமதி அருகே உள்ள குன்னப்பட்டில், ஜப்பான் சிட்டி தொழிற்பூங்கா உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் உட்பட, 5,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அவசர மருத்துவ சேவைக்காக, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே வருகின்றனர்.
இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவசரமாக செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் இல்லாமல், செய்வதறியாமல் தவிக்கின்றனர். இதனால், அந்த நேரத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பூஞ்சேரி, மாமல்லபுரம் போன்ற இடங்களிலிருந்து ஆம்புலன்சை வரவழைக்க வேண்டியுள்ளது.
இதனால் நேர விரயம் ஏற்பட்டு, நோயாளிகள் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் கூட, பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்டபோது, அவசரத்திற்கு மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், வேறொரு இடத்தில் இருந்து, தாமதமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது.
இதே போல, பல முறை ஆம்புலன்ஸ் இல்லாமல், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
எனவே, மானாமதி மருத்துவமனையிலேயே தயார் நிலையில் ஆம்புலன்ஸ் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.