/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழவேலி குடிநீர் திட்டப்பணி ஜவ்வு
/
பழவேலி குடிநீர் திட்டப்பணி ஜவ்வு
ADDED : பிப் 01, 2025 12:37 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சிக்கு பாலாற்று தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து, மெயின் குழாய் இணைக்கும் பணி, மின் இணைப்பு வாங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகரையொட்டி உள்ள பழவேலி, மாமண்டூர் பாலாற்று கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் இணைப்பு வாயிலாக, தினமும் 45 லட்சம் லிட்டர் குடிநீர், நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம், வீடுகள், கடைகள் மற்றும் தெரு குழாய்களில், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மழைக்காலங்களில், பழவேலி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குழாய்கள், கேபிள்கள் அடித்துச்செல்லப்படுவதால், குடிநீர் வினியோகம் பணி தடைப்படுகிறது. இதற்கு தீர்வுகாண, அரசுக்கு நகராட்சி நிர்வாகம் கருத்து அனுப்பியது.
அதன்பின், குடிநீர் பணிக்காக, மூலதன மானிய நிதி 2022-- 23 ம் நிதியாண்டில், 7 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இப்பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, தனியார் நிறுவனம், புதிய குடிநீர் கிணறு உள்ளிட்ட பணிகளை, கடந்த 2023 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, பணி துவங்கி நடைபெற்று வந்தது.
அதன்பின், புதிதாக ஐந்து நீர் ஆதார கிணறுகள், தரைமட்ட நீர்தேக்க தொட்டி, பைப்லைன், கேபிள் அமைக்கும் பணிகள் அனைத்தும் துவங்கி, கடந்த ஆண்டு அக்., மாதம் பணிகள் நிறைவு பெற்றது. ஆனால், தரைமட்ட தொட்டியிலிருந்து, மெயின் லைன் செல்லும் குழாயில் இணைக்கும் பணி மற்றும் தட்டான்மலை மேல் நிலை நீர்தேக்கதொட்டிக்கு, மின் இணைப்பு வழங்கும் பணி, நடைபெறாமல் உள்ளன. இப்பணியை விரைந்து முடித்து, நகரவாசிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
நகராட்சி ஆணையர் ஆண்டவன் கூறியதாவது:
பழவேலி பாலாற்றில், புதிய கிணறுகள் அமைக்கும்பணி நிறைவு பெற்றது. தரைமட்ட தொட்டியிலிருந்து, மெயின் லைன் குழாய் இணைக்கும் பணி, தட்டான்மலை நீர்தேக்க தொட்டி மின் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து, தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.