/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து அடாவடி! செங்கையில் பாதசாரிகள் கடும் அவதி
/
நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து அடாவடி! செங்கையில் பாதசாரிகள் கடும் அவதி
நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து அடாவடி! செங்கையில் பாதசாரிகள் கடும் அவதி
நடைபாதை, சாலைகளை ஆக்கிரமித்து அடாவடி! செங்கையில் பாதசாரிகள் கடும் அவதி
ADDED : டிச 21, 2025 05:33 AM

- நமது நிருபர் குழு - செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட உட்புற சாலைகளின் நடைமேடை பாதைகளையும், சாலையோரங்களையும் வியாபாரிகள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளதால் மக்கள், பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நடை பாதை மேடைகளில், பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டிய மக்கள் விபத்து அச்சத்துடன், சாலை ஓரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி மற்றும் மறைமலை நகர், மதுராந்தகம், செங்கல்பட்டு, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன.
தவிர, அச்சிறுபாக்கம், இடைகழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய ஆறு பேரூராட்சிகள் உள்ளன.
பாதுகாப்பு இங்கு, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் நகராட்சிகளின் பிரதான உட்புற சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பயணிக்கின்றன.
இதனால், பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல, சாலையோரங்களில் 4 முதல் 5 அடி அகலத்தில் நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நடைமேடைகள் அனைத்தும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால், நடைமேடையில் பாதுகாப்புடன் நடந்து செல்ல வேண்டிய மக்கள், சாலையில் நடந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதனால், வாகனங்கள் மோதி காயமடைவதும், உயிர் பலியும் அரங்கேறி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நடைமேடை ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பல தரப்பிலும் புகார்கள் வந்து உள்ளன.
மக்கள் கூறியதாவது:
விளம்பர பதாகை வைப்பது, பொருட்களை அடுக்கி வைப்பது, வாகனங்களை நிறுத்தி வைப்பது என, மக்கள் பயன்பாட்டிற்கான நடை மேடைகளை வியாபாரிகள் பலவிதங்களில் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இவை ஆக்கிரமிப்பில் உள்ளதால், நடைபாதை இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை.
வியாபாரம் நடைமேடையில் உரிமையோடு நடந்து சென்றால், 'பொருள் அடுக்கி வச்சிருக்கிறது கண் தெரியலையா, சாவு கிராக்கி' என்றெல்லாம் வசை பாடுகின்றனர்.
சில கடைக்காரர்கள், நடை பாதைகளையும் ஆக்கிரமித்து, சாலையிலும் பொருட்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.
இதனால், சாலையின் அகலம் சுருங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் சாலைகளில் நடந்து செல்லும்போது, வாகனங்கள் இடித்து காயமடைவதும், கனரக வாகனங்கள் மோதி உயிரிழப்பதும் நடக்கிறது.
நடைபாதைகளையும், சாலைகளையும் ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்கள் வாயிலாக அதிகாரிகளுக்கு மாதம் தோறும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. எனவே, இது குறித்து எந்த துறை அதிகாரியும் நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மறைமலை நகர் நகராட்சி நகர பகுதியில் அண்ணா சாலை, அடிகளார் சாலை, பாவேந்தர் சாலை, திருவள்ளூவர் சாலை, கம்பர் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன. இங்கு மருத்துவமனைகள், வங்கி, வணிக கடைகள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன.
நடவடிக்கை பல்வேறு கடைகள் சாலையில் 10 அடி துாரம் வரை ஆக்கிரமிப்பு செய்து கடையின் முகப்பு பகுதியில் இரும்பு ஓடுகள் அமைத்து தங்களின் கடைகளை செயல்படுத்தி வருகின்றனர். அண்ணா சாலையில் 15 அடிவரையும், பாவேந்தர் சாலை, எம். ஜி. ஆர்., சாலையில் 15 அடியும், திருவள்ளுவர் சாலை, கம்பர் தெருவில் 15 அடி வரையும் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதே போல் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடை பாதைகள், சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

