/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி லாரிகளை கட்டுப்படுத்த கோரி பெரியவெண்மணி மக்கள் சாலை மறியல்
/
கல் குவாரி லாரிகளை கட்டுப்படுத்த கோரி பெரியவெண்மணி மக்கள் சாலை மறியல்
கல் குவாரி லாரிகளை கட்டுப்படுத்த கோரி பெரியவெண்மணி மக்கள் சாலை மறியல்
கல் குவாரி லாரிகளை கட்டுப்படுத்த கோரி பெரியவெண்மணி மக்கள் சாலை மறியல்
ADDED : நவ 11, 2025 10:38 PM

செய்யூர்: பெரியவெண்மணி கிராமத்தில், குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் கல் குவாரி லாரிகள் செல்வதை தடுக்க வலியுறுத்தி, மேல்மருவத்துார் - -செய்யூர் சாலையில், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யூர் அடுத்த பெரியவெண்மணி ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நான்கு கல் குவாரிகள் மற்றும் 'கிரஷர்'கள் செயல்படுகின்றன.
இதனால், தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள், பெரியவெண்மணி கிராமம் வழியாக வந்து செல்கின்றன.
குழந்தைகள் பள்ளி செல்லும் நேரமான, காலை 8:00 முதல், -10:00 மணி மற்றும் மாலை 4-:00 முதல் 6:00 மணி வரை லாரிகள் செல்வதை கட்டுப்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி குழந்தைகள் செல்லும் நேரத்தில் வேகமாக சென்ற லாரியை மடக்கிய பெரியவெண்மணி கிராம வாலிபர்கள், லாரி ஓட்டுநரை தாக்கி உள்ளனர்.
இதையடுத்து செய்யூர் போலீசார், லாரி ஓட்டுநரை தாக்கியதாக பெரியவெண்மணி கிராமத்தை சேர்ந்த தேவன், 32, அசோக்குமார், 32, ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணியளவில், பெரியவெண்மணி கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் கல் குவாரி லாரிகள் செல்வதை கட்டுப்படுத்த கோரியும், கைது செய்யப்பட்ட வாலிபர்கள் இருவரையும் விடுவிக்கவும் வலியுறுத்தி, பெரியவெண்மணி கூட்ரோடு பகுதியில், மேல்மருவத்துார் - -செய்யூர் மாநில நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் டி.எஸ்.பி., சதீஸ்குமார், அவர்களிடம் பேச்சு நடத்தினார். கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களை அழைத்து பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதையடுத்து, 1 மணி நேரத்திற்குப் பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

