/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இடைக்கழிநாடு மின்பகிர்வு மனையிலிருந்து கிராமங்களை பிரிக்க மக்கள் எதிர்ப்பு
/
இடைக்கழிநாடு மின்பகிர்வு மனையிலிருந்து கிராமங்களை பிரிக்க மக்கள் எதிர்ப்பு
இடைக்கழிநாடு மின்பகிர்வு மனையிலிருந்து கிராமங்களை பிரிக்க மக்கள் எதிர்ப்பு
இடைக்கழிநாடு மின்பகிர்வு மனையிலிருந்து கிராமங்களை பிரிக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : நவ 21, 2025 02:00 AM
செய்யூர்:இடைக்கழிநாடு மின்பகிர்வு மனையில் உள்ள கிராமங்களைப் பிரித்து, மடையம்பாக்கம் மின்பகிர்வு மனையில் இணைக்க, ஐந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
செய்யூர் அடுத்து உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடப்பாக்கம் பகுதியில் உள்ள மின் பகிர்வு மனை சார்பாக மின்கம்பங்கள் பராமரிக்கப்பட்டு, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூவத்துார், கடுகுப்பட்டு மின்பகிர்வுமனை கட்டுப்பாட்டில் உள்ள சில கிராமங்கள் மற்றும் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம், தழுதாலிகுப்பம் மற்றும் முட்டுக்காடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி புதிதாக, மடையம்பாக்கம் பகுதியில் புதிய மின்பகிர்வு மனை உருவாக்க பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடப்பாக்கம் மின்பகிர்வு மனையில் உள்ள கிராமங்களை மடையம்பாக்கம் மின்பகிர்வு மனையில் இணைத்தால், மின் கட்டணம் செலுத்த, மின்தடைகள் குறித்து புகார் தெரிவிக்கவும், மின்வாரிய அதிகாரிகளை சந்திக்க நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், மின்பகிர்வு மனையை பிரிக்க ஓதியூர், நயினார்குப்பம், முதலியார்குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதிய மின்பகிர்வு மனை உருவாக்க வேண்டும் எனில், ஓதியூர் அல்லது அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

