/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வயலுாரில் கல் குவாரிக்கு எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா
/
வயலுாரில் கல் குவாரிக்கு எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா
வயலுாரில் கல் குவாரிக்கு எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா
வயலுாரில் கல் குவாரிக்கு எதிர்ப்பு குறைதீர் கூட்டத்தில் மக்கள் தர்ணா
ADDED : அக் 08, 2024 01:29 AM

மறைமலை நகர், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி தலைமையில் நேற்று நடந்தது. இதில், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட 356 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
செய்யூர் வட்டம், நெற்குணம் அடுத்த வயலுார் கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், தங்கள் கிராமத்தில் கல் குவாரி மற்றும் கல் அரவை இயந்திரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் மனு அளிக்க முயன்றனர்.
எதிர்ப்பு பதாகைகளுடன் கூட்டமாக வந்த மக்களை, கலெக்டர் அலுவலக நுழைவு பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரும் செல்ல அனுமதி மறுத்து, ஐந்து பேரை மட்டுமே அனுமதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தரையில் அமர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின், 20 நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கலெக்டர் அருண்ராஜை சந்தித்து, வயலுார் கிராம மக்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
எங்கள் கிராமத்தில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயமே பிரதான தொழில். தற்போது, எங்கள் கிராமத்தில் கல் குவாரி மற்றும் கல் அரவை இயந்திரங்கள் அமைக்க, சில தனியார் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
இதனால், எங்கள் கிராமம் மட்டுமின்றி நெற்குணம், புளியணி, துாதுவிளம்பட்டு உள்ளிட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, சுவாசிக்க கூட முடியாத நிலை ஏற்படும். எம் - சாண்ட் பவுடர் விவசாய பயிர்கள் மீது பட்டு, விவசாயம் பாதிப்பு ஏற்படும்.
கற்களை வெடி வைத்து வெட்டி எடுக்கும் போது, அதிர்வின் காரணமாக வீடுகளில் விரிசல் விழும் அபாயம் உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் என, கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

