/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெரிய கால்வாய் கரையை அகற்றி பாலம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
பெரிய கால்வாய் கரையை அகற்றி பாலம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பெரிய கால்வாய் கரையை அகற்றி பாலம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
பெரிய கால்வாய் கரையை அகற்றி பாலம் அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : பிப் 17, 2024 01:37 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு ஊராட்சியில் அடங்கிய பஞ்சந்திருத்தி கிராமத்தில், பெரிய அளவிலான மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் வழியாக செங்கல்பட்டு கொளவாய் ஏரி, கொண்டங்கி ஏரி, மானாமதி ஏரிகளின் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை குறுக்கே சென்று பகிங்ஹாம் கால்வாயில் கலந்து கடலுக்கு செல்கிறது.
கால்வாயின் கிழக்கு பகுதியில் ஜப்பான் தொழில் நகரம் எனக் கூறப்படும் ஒன் ஹப் சென்னை என்ற தொழிற்பேட்டை அமைந்துள்ளது. மேற்கு பகுதியில் குடியிருப்பு வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளன.
தொழிற்பேட்டை நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் கிழக்கு பகுதியில் மட்டும் கரையை உயர்த்தியுள்ளனர். மேற்கு பகுதியில் முழுமையாக கரையை உயர்த்தவில்லை.
இதனால், புயல் மழை காலங்களில் கால்வாயில் செல்லும் மழைநீர், கரையின் இடைவெளியில் இருந்து வெளியேறி குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த தொழிற்பேட்டை சார்பில் கால்வாய் கரையை அகற்றிவிட்டு, குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கால்வாயில் ஆர்ப்பரித்து வரும் மழைநீர், பாலம் அமைப்பதால் முழுதும் செல்ல வழியின்றி, அருகில் உள்ள வீடு, விவசாய நிலங்களை மூழ்கடிக்கும் என குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக, குன்னப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில், கலெக்டரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கால்வாயின் இருபுறமும் தொழிற்பேட்டை சார்ந்த நிலம் உள்ளது. முறையான அனுமதியுடன் கால்வாய் குறுக்கே பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
மழைநீர் செல்லும்போது எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்டு, உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.