/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரமனுார் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு
/
பேரமனுார் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு
பேரமனுார் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு
பேரமனுார் அரசு உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளியாக தரம் உயர்வு
ADDED : ஆக 18, 2025 02:20 AM
செங்கல்பட்டு:பேரமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, அரசு உத்தரவிட்டுள்ளது.
மறைமலை நகராட்சியில் 16வது வார்டு, பேரமனுார் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு பேரமனுார், ஆப்பூர், பனங்கோட்டூர், மேட்டுக்காடு, சாமியார்கேட் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்கள், மேல்நிலைப் பள்ளி படிப்பற்காக, தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, மறைமலை நகர் சென்று படித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே தண்டவாளம் ஆகியவற்றை கடந்து செல்லும் மாணவர்கள், விபத்து அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதனால், இந்த உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, கடந்த பல ஆண்டுகளாக கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம், பெற்றோர் - ஆசிரியர் கழகம் மற்றும் கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
மேற்கண்ட பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அதன் பின், 2025 - 26ம் ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, பேரமனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பேரமனுார் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, கடந்த 13ம் தேதி அரசு உத்தரவிட்டது.
இதனால், அப்பகுதி மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
மேற்கண்ட பள்ளியில், விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.