/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருங்குடி குப்பை கிடங்கு சத்தமின்றி விரிவாக்கம்... குற்றச்சாட்டு:சாலையில் படையெடுக்கும் பூச்சிகளால் விபத்து அபாயம்
/
பெருங்குடி குப்பை கிடங்கு சத்தமின்றி விரிவாக்கம்... குற்றச்சாட்டு:சாலையில் படையெடுக்கும் பூச்சிகளால் விபத்து அபாயம்
பெருங்குடி குப்பை கிடங்கு சத்தமின்றி விரிவாக்கம்... குற்றச்சாட்டு:சாலையில் படையெடுக்கும் பூச்சிகளால் விபத்து அபாயம்
பெருங்குடி குப்பை கிடங்கு சத்தமின்றி விரிவாக்கம்... குற்றச்சாட்டு:சாலையில் படையெடுக்கும் பூச்சிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 27, 2025 09:53 PM

பெருங்குடி குப்பை கிடங்கை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வரை சத்தமின்றி மாநகராட்சி விரிவாக்கம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், குப்பை கழிவுகளில் இருந்து படையெடுக்கும் பூச்சிகள் தாக்குவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, விபத்து நடக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருந்து தினமும், 6,100 டன் குப்பை சேகரமாகி வருகிறது. அதில், ஒன்பது முதல் 15 வரையிலான ஆறு மண்டலங்களில் எடுக்கப்படும் 2,600 டன் குப்பை, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டியுள்ள பெருங்குடி கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.
இதில், வீட்டு குப்பை மட்டுமின்றி, தொழிற்சாலை, மருத்துவம், ரசாயனம், மின்சாதன கழிவுகள் என கலவையாக கொட்டப்படுகின்றன. இவற்றின் தாக்கத்தால், பெருங்குடி குப்பை கிடங்கைச் சுற்றி, 4 கி.மீ., நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தவிர, குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் மீத்தேன் உள்ளிட்ட ரசாயனத்தால் அவ்வப்போது தீ பற்றி, வெளியேறும் நச்சுப்புகை பெருங்குடி, துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, விஜயநகர், வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி ஆகிய பகுதிகளில் காற்றில் கலந்துவிடுகிறது.
இதனால் அப்பகுதிமக்கள், தினசரி வந்து செல்வோர், சுவாச நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, தோல் நோய், முடி உதிர்தல், பெண்களுக்கு குறை பிரசவம் உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்குகின்றனர்.
இப்பிரச்னையை தீர்க்க, 'பயோமைனிங்' முறையில் குப்பை களையப்பட்டு, அவற்றில் இருந்து கல், மணல், இரும்பு, மரக்கட்டை, கண்ணாடி, ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தனித்தனியாக பிரித்து, மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
தொடர்ச்சியாக பயோமைனிங் பணி நடந்தாலும், மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை, பெருங்குடியில் கிடங்கில் கொட்டுவது அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் குப்பை மலையால், பெருங்குடி குப்பை கிடங்கை மறைமுகமாக விரிவாக்கம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவிர குப்பையில் மொய்க்கும் பூச்சிகள் அதிகரித்துள்ளதால், அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்லும்போது, கண், காதுகளில் புகுந்து இம்சை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலரும், துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான பிரான்சிஸ் கூறியதாவது:
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் இருந்து 1 கி.மீ., உள்ளே இருந்த பெருங்குடி குப்பை கிடங்கு, தற்போது சாலையில் இருந்து 100 மீட்டருக்கு வந்துவிட்டது.
ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு, ரேடியல் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால், நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
அதிகளவு குப்பை சேர்ந்து வருவதால், மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாத அளவிற்கு பூச்சிகள் படையெடுக்கின்றன. அவ்வாறு சூழ்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் அதிகளவில் பூச்சிகள் சுற்றித்திரிகின்றன.
வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகளவில் மழை பெய்து, குப்பை கிடங்கில் தண்ணீர் தேங்கும். அப்போது அதிலிருந்து கடுமையாக துர்நாற்றம் வரும். தவிர, பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கும்.
எனவே, ரேடியல் சாலையோரம் கொட்டப்பட்டு வரும் குப்பை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தவிர, ஏற்கனவே கொட்டியுள்ள குப்பை கழிவுகளை, சாலையில் இருந்து, 1 கி.மீ., உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குப்பையை கையாள்வது சவாலானது
பெருங்குடி குப்பை கிடங்கில், 'பயோ மைனிங்' முறை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முடியும் தருவாயில் இருந்தாலும், ஏழு மண்டலங்களில் தினமும் சேகரமாகும் குப்பை, பெருங்குடியில் தான் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது, 30 லட்சம் முதல் 40 லட்சம் டன் வரை குப்பை சேர்ந்துள்ளது. இந்த குப்பை கையாளும் பணி சவால் நிறைந்ததாகவே உள்ளது.
கொடுங்கையூரில் குப்பை எரி உலை பயன்பாட்டிற்கு வந்தால், இங்கு குப்பை தேங்குவது குறையலாம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பெருங்குடியிலும் குப்பை எரி உலை அமைக்க, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு இடங்களிலும் எரி உலை அமைத்தால், குப்பை சேகரமாகாமல் தடுக்க முடியும். - மு.மகேஷ்குமார், துணை மேயர், சென்னை மாநகராட்சி
- நமது நிருபர் -