/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு :நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை
/
கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு :நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை
கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு :நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை
கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு :நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை
ADDED : டிச 15, 2025 03:53 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதால், போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுராந்தகம், வேடந்தாங்கல், கருங்குழி, நெல்வாய், கரிக்கிலி, படாளம், வையாவூர், சிலாவட்டம், மேலவலம்பேட்டை, புக்கத்துறை, ஈசூர், பூதுார் பகுதிகளில், கிராம இளைஞர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கிராமத்திலிருந்து சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு போன்ற நகரங்களுக்கு கல்லுாரிக்கு சென்று வரும் கிராம பகுதி கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக, கிராமத்தில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கிராமங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடுகாடு பகுதியில் குழுவாக சேரும் இளைஞர்களுக்கு, விலை உயர்ந்த 'பைக்'குகளில் வரும் இளைஞர்கள், கஞ்சா 'சப்ளை' செய்து வருகின்றனர்.
மேலும், பேருந்தே செல்லாத கிராமங்களுக்கு கூட, கஞ்சா செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், கஞ்சா புகைக்க பணம் தேவைப்படும் போது மொபைல் போன் பறிப்பு, பைக் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, வேடந்தாங்கல் பகுதியில் வழிப்பறி மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கஞ்சா புகைக்கும் நபர்கள், இந்த சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மதுராந்தகம் மற்றும் படாளம் போலீசார், கிராமப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கிராம இளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும். மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

