/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நள்ளிரவு கடந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது செங்கை மாவட்ட விடுதிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
/
நள்ளிரவு கடந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது செங்கை மாவட்ட விடுதிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
நள்ளிரவு கடந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது செங்கை மாவட்ட விடுதிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
நள்ளிரவு கடந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது செங்கை மாவட்ட விடுதிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை
ADDED : டிச 31, 2024 01:00 AM
மாமல்லபுரம், டசெங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் விடுதிகளில், புத்தாண்டு கொண்டாட்ட கேளிக்கைகளில் சட்ட விதிகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்து உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகள், சாதாரண விடுதிகள் அதிகமாக இயங்குகின்றன.
இவற்றில் ஆண்டுதோறும் டிச., 31ம் தேதி நள்ளிரவில், ஆங்கில புத்தாண்டை வரவேற்று கேளிக்கை கொண்டாட்டம் களைகட்டும். கடலோர விடுதிகளில், சென்னை உள்ளிட்ட பகுதியினர் அறை முன்பதிவு செய்து, அன்றிரவு தங்கி மது விருந்து, அதிரும் இசையுடன் நடனம், உல்லாசம் உள்ளிட்ட கேளிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்பர்.
இன்று 2024ம் ஆண்டு முடிந்து, நள்ளிரவு 12:00 மணிக்கு 2025 புத்தாண்டு துவங்குகிறது. இதை கொண்டாட பல்வேறு விடுதிகளில், ஏராளமானோர் அறை முன்பதிவு செய்துள்ளனர்.
இன்று மாலை 6:00 மணி முதல், இவர்கள், கடலோர விடுதிகளுக்கு படையெடுப்பர் என்பதால், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம் போலீஸ் உட்கோட்ட பகுதியில் இயங்கும் விடுதி நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்தி, கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுகுறித்த போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் அறிக்கை:
அதன்படி விடுதிகள், ரெஸ்டாரன்ட் எனும் உணவகங்களில் முன்பதிவு செய்த ரசீது வைத்துள்ள நபர்கள் மட்டுமே, 31ம் தேதி மாலை 6:00 - இரவு 12:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
திருவிடந்தையில் சோதித்து, ரசீது இல்லாமல் வருவோர் திருப்பி அனுப்பப்படுவர். விடுதி நிர்வாகம் விருந்தினர்களை அவரவர் அறையில் தங்க வைக்க வேண்டும்.
திறந்தவெளியில் சேர்ந்து கொண்டாட அனுமதியில்லை. அவர்கள் கடற்கரை செல்லாமல், விடுதி நிர்வாகமே ஊழியர் நியமித்து தடுக்க வேண்டும். நீச்சல் குளத்திலும் அனுமதிக்கக் கூடாது.
இரவு 12:30 மணி கடந்து, விடுதிகள் இயங்கக் கூடாது. மது அருந்தியவர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், விடுதிகளே பொறுப்பு. பட்டாசு வெடிக்க கூடாது. விதிமீறல்கள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரை பகுதிகளில், கடலில் இறங்கி குளிக்கவும், படகில் கடலுக்குள் அழைத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து, படகுகள் பறிமுதல் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணியில், 6 ஏ.டி.எஸ்., - டி.எஸ்.பி., மற்றும் 20 இன்ஸ்பெக்டர்கள், 645 போலீசார் உட்பட, மொத்தம் 671 போலீசார் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். போலீசார் ரோந்து பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுவர்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 2025 புத்தாண்டை முன்னிட்டு, இன்று 31ம் தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை, மாவட்டத்தில் முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டத்தின் முக்கிய சந்திப்புகள் உட்பட 30 இடங்களில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவர்.
இத்துடன், மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருப்போரூர் முருகன் கோவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவில் உளிட்ட பல கோவில்கள் உள்ளன. ஆங்கில புத்தாண்டையொட்டி, பொதுமக்கள் இங்கு குவிந்து சுவாமி தரிசனம் செய்வர்.
மாமல்லபுரம், கோவளம், மூட்டுக்காடு, செய்யூர் ஆலம்பரைகோட்டை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வண்டலுார் உயிரியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களிலும் குவிந்து கொண்டாடுவர். இதனால், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, செங்கல்பட்டு மாவட்ட போலீசார் மற்றும் சென்னை தாம்பரம் மாநகர போலீசார் என, 671 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.