/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூம்புகார் நிறுவனத்தின் விற்பனை 3 ஆண்டுகளில் 134 கோடி ரூபாய் அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
/
பூம்புகார் நிறுவனத்தின் விற்பனை 3 ஆண்டுகளில் 134 கோடி ரூபாய் அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
பூம்புகார் நிறுவனத்தின் விற்பனை 3 ஆண்டுகளில் 134 கோடி ரூபாய் அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
பூம்புகார் நிறுவனத்தின் விற்பனை 3 ஆண்டுகளில் 134 கோடி ரூபாய் அமைச்சர் அன்பரசன் பெருமிதம்
ADDED : நவ 27, 2024 12:37 AM

மாமல்லபுரம்:தமிழக பூம்புகார் நிறுவனம், மூன்றரை ஆண்டுகளில், 134 கோடி ரூபாய் மதிப்பு, கைவினைப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கூறினார்.
கைவினைக் கலைஞர்களுக்கு, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன விருதுகள் வழங்கும் விழா, மாமல்லபுரம், தனியார் கடற்கரை விடுதியில் நேற்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, கைத்திறன், கைத்தறி, துணிநுால் துறை செயலர் அமுதவல்லி, கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் அமிர்தஜோதி, சப் - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில், கைவினை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி, அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தமிழ் சமுதாயம் உலகம் முழுதும் அறியப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும் கலைகள் தான் காரணம். உலகமே கண்டு வியக்கும் சிற்பங்கள், தமிழகத்தில் தான் உள்ளன.
தமிழகத்தில், 130 இடங்களில் கைவினைக் கலைஞர்கள் அதிகம் உள்ளனர். 40 இடங்கள், முக்கிய கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் இடங்களாக உள்ளன.
பூம்புகார் நிறுவனம், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 134.8 கோடி ரூபாய் மதிப்பில், கலைப்பொருட்கள் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டுமே, 48.34 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. 3 கோடி ரூபாய் மதிப்பு கலைப்பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சிறந்த கைவினைக் கலைஞர்களை ஊக்கப்படுத்த, ஆண்டுதோறும் 263 விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் ஸ்டாலின், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், பூம்புகார் வாழும் கைவினை பொக்கிஷம் விருதை எட்டு பேருக்கும், மாநில விருதை 10 பேருக்கும் வழங்கினார்.
இவ்விழாவில், மொத்தம் 227 பேருக்கு, 24.50 லட்சம் ரூபாய் மதிப்பில் விருது, பரிசு அளித்து கவுரப்படுத்தப்பட்டுள்ளனர். பூம்புகார் பொன்விழாவை முன்னிட்டு, துறை சார்ந்த முன்னோடிகளையும் கவுரப்படுத்தியுள்ளோம். கள்ளக்குறிச்சி மரச்சிற்ப புவிசார் குறியீடை பயன்படுத்த, 20 பேருக்கு அனுமதி சான்று அளித்துள்ளோம்.
கைவினைக் கலைஞர்களுக்கு திட்டங்கள் குறித்து, 20 இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தி, கலைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். மாமல்லபுரம் கற்சிற்பம் உள்ளிட்டவற்றுக்கு, ஏற்கனவே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் நெட்டி உள்ளிட்ட 10 பொருட்களுக்கு பெற, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், 52 லட்சம் ரூபாய் மதிப்பில், கைவினைக் கலைஞர்கள் 150 பேருக்கு, தஞ்சாவூர் ஓவியம், பத்தமடை பாய் நெசவு உள்ளிட்ட ஆறு வகை திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மூன்று குழுவினருக்கு, குழு உற்பத்தி விருது வழங்கப்பட்டது. மூன்று பேருக்கு, பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது வழங்கப்பட்டது.
மேலும், 85 பேருக்கு, பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருதும், 30 வயதிற்கு உட்பட்ட 150 பேருக்கு, அடுத்த தலைமுறைக்கான கைத்திறன் விருதும் வழங்கப்பட்டன.