10,000 விவசாயிகளில் 3,000 பேருக்கு மட்டுமே முன்னுரிமை: சூரிய சக்தியில் இயங்கும் சோலார் மோட்டார் திட்டம்
10,000 விவசாயிகளில் 3,000 பேருக்கு மட்டுமே முன்னுரிமை: சூரிய சக்தியில் இயங்கும் சோலார் மோட்டார் திட்டம்
UPDATED : செப் 16, 2026 08:18 PM
ADDED : செப் 16, 2026 08:14 PM
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 10,000 விவசாயிகளில், மூவாயிரம் பேருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க உத்தரவிடப்பட்டது. இதில், 1,300 பேருக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் திட்டத்திற்கு விவசாயிகளிடம் வரவேற்பு இல்லாததால், ஆண்டு தோறும் நிர்ணயிக்கப்படும் இலக்கை வேளாண் துறை குறைத்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாக்களில், 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாக்களில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
நீர் பாசனத்திற்காக, முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், சூரிய சக்தியால் இயங்க கூடிய மோட்டார்கள்
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அவற்றை மத்திய அரசின் விலை மானியத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும். இதர விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மத்திய அரசு 40 சதவீதமும் மாநில அரசு 30 சதவீத மானியம் வழங்குகிறது.
தவிர, மின் இணைப்பு இல்லாமல் பாசன கிணறு வைத்துள்ள விவசாயிகள் மற்றும் பொது கிணறு மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளும் இந்த திட்டத்தின் வாயிலாக, சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார்களை அமைத்துக் கொள்ளலாம்.
கடந்த 2022- - 2023ம் ஆண்டில் 81.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 46 பேருக்கு சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. 2025 - -2026ம் ஆண்டில் 12 பேருக்கு மட்டுமே 14.46 லட்சம் ரூபாயில் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில், சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் திட்டம் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.
இதனால், கடந்த 10 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், அரசிடம் இலவச மின் இணப்பு கோரி காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.
பலருக்கும் சூரிய சக்தி மோட்டார் திட்டம் குறித்த தகவல் தெரியவில்லை. மேலும், அரசு அளிக்கும் மானியம் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட தயங்குகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். தோட்டக்கலை துறை சார்பில், குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பும், தற்போது முறையாக வழங்குவதும் இல்லை.
சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் திட்டம் குறித்து அதிகாரிகள் விளக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்த தயாராக உள்ளோம்.
இந்த திட்டத்திற்கு எதிராக மின் வாரிய அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால், இத்திட்டம் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரியபடுத்தி செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வேளாண் பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் திட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் விவசாயிகள் அரசு வழங்கும் இலவச மின் இணைப்புக்கு மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர்.
வயல்களில் அறுவடை காவல் முடிந்த பின் சோலார் தகடுகள் திருடு போகும் என்ற அச்சத்தாலும் விவசாயிகள் பின் வாங்குகின்றனர். இந்த ஆண்டு, சூரிய சக்தி திட்டம் மூலம் சோலார் மோட்டார் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2026 - -2027ம் ஆண்டுக்கான இலக்கு மற்றும் பயனாளர்கள் தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
