/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் துணிக்கடை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
தனியார் துணிக்கடை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : மே 16, 2025 09:31 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பள்ளப்பேட்டையைச் சேர்ந்தவர் நரேந்திரன்.
இவர், 2024 மே 28ம் தேதி, சென்னை குரோம்பேட்டை சரவண ஸ்டோரில், தன் மகனுக்காக நீச்சல் போட்டிக்கான 'சர்ட், டிரவுசர்' வாங்கியுள்ளார்.
அதில், ஆந்திர மாநில விளையாட்டுத் துறை ஆணையத்தின் முத்திரை போலியாக பதிக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்த உடைகளை அணிந்து சென்ற போது, நரேந்திரனின் மகன் நீச்சல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியான நரேந்திரன், சென்னை குரோம்பேட்டை, சரவண ஸ்டோர் மற்றும் அதன் தலைமை அலுவலகம் மீது, செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் காசிபாண்டியன் பிறப்பித்த உத்தரவு:
ஆந்திரா மாநில விளையாட்டு ஆணையத்தின் முத்திரை பதிக்கப்பட்ட போலியான 'டி - சர்ட்'டை, சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்பனை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு நஷ்ட ஈடாக, 10,000 ரூபாய், செலவுத் தொகையாக 10,000 ரூபாய் என, 20,000 ரூபாய் வழங்க வேண்டும்.
மேலும், போலியான டி சர்ட்டை விற்பனை செய்த சரவண ஸ்டோர் நிறுவனம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, 3 லட்சம் ரூபாயை, மாவட்ட நுகர்வோர் நிதிக்கு செலுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் உத்தரவிட்டார்.