/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தடுப்பணைகள் உடைப்பால் மழைநீர் சேகரிப்பில் சிக்கல்
/
தடுப்பணைகள் உடைப்பால் மழைநீர் சேகரிப்பில் சிக்கல்
தடுப்பணைகள் உடைப்பால் மழைநீர் சேகரிப்பில் சிக்கல்
தடுப்பணைகள் உடைப்பால் மழைநீர் சேகரிப்பில் சிக்கல்
ADDED : நவ 20, 2025 04:08 AM

அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ.14 கோடி வீணடிப்பு
காஞ்சிபுரம்: பருவமழை கொட்டித் தீர்த்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 கோடி ரூபாயில், 288 தடுப்பணைகள் அமைக்கப்பட்டாலும், பல இடங்களில் உடைக்கப்பட்டு விட்டதால், மழைநீர் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரிக்காததால் நிதி வீணடிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், நடப்பு நிதி ஆண்டில், 70.80 கோடி ரூபாயில், மரக்கன்றுகள் நடுதல், புதிய குளம் வெட்டுதல், ஏரி பராமரித்தல், சாலைகள் போடுதல் உள்ளிட்ட, 10,217 பணிகள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, 2021 - 22ம் நிதி ஆண்டு முதல், 2023 - 24ம் நிதி ஆண்டு வரையில், பிரதான நீர் வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களில், கற்கள் அடுக்கிய தடுப்பணை, கான்கிரீட் தடுப்பணைகள் கட்ட ஊரக வளர்ச்சி துறை அனுமதி அளித்தது.
இதன் மூலமாக, நிலத்தடி நீரை சேமித்து, ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14.20 கோடி ரூபாய் செலவில், 288 சிறிய அளவிலான தடுப்பணைகள் கட்டி முடித்தனர்.
பெரும்பாலான தடுப்பணைகளை, ஏரி நீர் வரத்திற்கு இடையூறாக இருக்கிறது என, மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதை கண்காணிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் கை கட்டி வேடிக்கை பார்ப்பதால், மத்திய அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக, கிராம மக்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:
கால்வாய் குறுக்கே கட்டிய தடுப்பணைகளால், மழைக்காலத்தில் தண்ணீர் தடைபடும் என, மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். ஒருசில ஊராட்சிகளில் தடுப்பணையை உடைத்தும், துளையிட்டும் தண்ணீர் தேங்காமல் செய்துள்ளனர். இதை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பூசிவாக்கம் ஊராட்சி தலைவர் எஸ்.லெனின்குமார் கூறியதாவது:
நீர் வரத்து கால்வாய் ஓர தடுப்பு சுவர் மற்றும் குறுக்கே தடுப்பணைகள் கட்ட, அரசு நிதி ஒதுக்குகிறது. சேதம் ஏற்பட்டால், சீரமைக்க நிதி ஒதுக்குவதில்லை. இதனால், சேதமான தடுப்பணைகளை சீரமைக்க முடியவில்லை.
ஊராட்சி நிர்வாகம், நீர்வள ஆதாரத்துறை, ஏரி நீர் பாசன சங்கம் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்து ஆலோசனை செய்து, தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீர்வரத்து கால்வாய் குறுக்கே கட்டிய தடுப்பணைகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரிக்காததால், அந்த திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், அதை உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து மக்களும் பாதுகாக்க வேண்டும். அப்போது, அந்த திட்டம் வெற்றிகரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதி ஒதுக்கீடு விபரம் நிதி ஆண்டு தடுப்பணை எண்ணிக்கை நிதி ஒதுக்கீடு - -கோடி ரூபாயில் 2021- - 22 213 9.94 2022 - -23 53 2.54 2023- - 24 22 1.72 மொத்தம் 288 14.20

