திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 17, 2026 07:52 PM
செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து, பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில், 24 கிராமங்கள் உள்ளன. பேருராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கும் குப்பை கழிவுகளை அகற்ற, 40க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேரும் குப்பையை தரம் பிரிக்காமல் மொத்தமாக வழங்குகின்றனர், இதனால், குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை குறித்து, பேரூராட்சி ஊழியர்கள் வார்டு வாரியாக சென்று குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் மட்கும், மட்காத குப்பை என, தரம்பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்கினால், மறுசுழற்சி செய்ய எளிதாக இருக்கும் எனவும், மருத்துவ கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தினார்.
