/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
/
செங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
செங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
செங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூன் 28, 2025 02:56 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கோட்டங்களில், 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன.
திருப்போரூர் வட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பிரபல கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம், புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.
நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக திருப்போரூர் உள்ள நிலையில் சாலை விபத்துகள், கொலை முயற்சி, நில பிரச்னை வழக்குகள் என, மாதம் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.
குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
ஒரே இரவில் திருட்டுகள்
கடந்த 25ம் தேதி ஒரே இரவில், திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் வீடு, கோவிலில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 53; திருப்போரூர் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் குடும்பத்துடன் வீட்டில் துாங்கிய போது, மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். பின், பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த செயின், வளையல், கம்மல் என, 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
அதேபோல், அங்குள்ள பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து, 1.5 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்து, கைரேகை நிபுணர்களை அழைத்து, தடயங்களை சேகரித்தனர்.
இப்படி ஒரே இரவில் வீடு, கோவிலில் திருட்டு சம்பவம் நடந்தது, அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், கடந்த 14ம் தேதி, சாலையில் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 16ம் தேதி இரவு, திருப்போரூர் காவல் எல்லையான மடையத்துார், மாமல்லபுரம் காவல் எல்லையான பையனுார், கேளம்பாக்கம் காவல் எல்லையான படூர் ஆகிய இடங்களில், மர்ம நபர்கள் பொதுமக்களிடம் பைக், மொபைல் போன், பணம் ஆகியவற்றை பறித்தனர். இந்த வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மே 18ம் தேதி காலவாக்கத்தில், வடமாநில தொழிலாளியிடம் மர்ம நபர்கள் மொபைல்போன் பறித்துக் கொண்டு தப்பினர்.
அதேபோல் கடந்த மே 17ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில், மேட்டுத்தண்டலம் அய்யப்பன் கோவிலில், மர்ம நபர்கள் மூன்று பேர் உண்டியலை உடைக்க முயற்சி செய்தனர்.
மூவரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து, திருப்போரூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இவ்வாறு கடந்த ஒன்றரை மாத காலத்தில், இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதால், பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இதுதவிர தற்கொலை, சாலை விபத்து, போக்குவரத்து நெரிசல், சிறு போராட்டம் என, பல பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனால், ஓ.எம்.ஆர்., சாலை, ஆறுவழிச்சாலை போன்ற முக்கிய இடங்களில், போலீசார் நிரந்தர சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பது, ரோந்து வாகனத்தில் சென்று காண்காணிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தேவைப்படுகின்றன. தற்போதுள்ள குடியிருப்புகள் விரிவாக்கம், மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், அனைத்து பகுதிகளையும் சட்டம் - - ஒழுங்கு போலீசாரால் கண்காணிக்க முடிவதில்லை.
எனவே, போலீசார் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செயின் பறிப்பு
செய்யூர் அருகே சூணாம்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோமதி, 45, என்பவர், கடந்த மாதம் 23ம் தேதி திண்டிவனம் சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கோமதி கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.
அதே நாளில், சித்தாமூர் அடுத்த நல்லாமூர் பகுதியில், சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம், 1.5 சவரன் நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பியோடினார். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
கடந்த மே 26ம் தேதி செங்கல்பட்டு அருகே ஆத்துாரில், பிரகாஷ் என்பவர் வீட்டில், 50 சவரன் தங்க நகைகள், 18,000 ரூபாய் திருடப்பட்டது.
மேலும் சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில், கடந்த 23ம் தேதி முருகையன் என்பவர் வீட்டில், 35 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.
கடந்த 24ம் தேதி இதே பகுதியில், வி.ஐ.பி., நகர் பகுதியில் மகாவீர் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாய் திருடப்பட்டது.
இது, மறைமலை நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டதில் இருந்து நடைபெற்ற, பெரிய சம்பவம்.
மேற்கண்ட சம்பவங்களில் துணிக்கடையில் திருடிய நபர்கள் மட்டுமே, செங்கல்பட்டு நகர போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்ற சம்பவங்கள் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், காவல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.