/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை எல்லை குழப்பத்தால் பொதுமக்கள் அவதி
/
25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை எல்லை குழப்பத்தால் பொதுமக்கள் அவதி
25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை எல்லை குழப்பத்தால் பொதுமக்கள் அவதி
25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை எல்லை குழப்பத்தால் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 09, 2025 01:30 AM

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஊராட்சிகளுக்கு பொதுவாக உள்ள சாலை, எல்லை குழப்பத்தால் 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் கீழ் உள்ள ஊனமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையாக, ஜனக்புரி -- மதனபுரி சாலை உள்ளது.
ஊனமாஞ்சேரி மற்றும் நெடுங்குன்றம் எல்லைப் பகுதியில் வசிப்போரின் பிரதான வழித்தடமாக உள்ள இச்சாலை, 220 மீட்டர் துாரம் கொண்டது.
இவ்விரு ஊராட்சிகளுக்கும் பொதுவான எல்லையாக இச்சாலை உள்ளதால், எந்த ஊராட்சி நிதியிலிருந்து சாலையை சீரமைப்பது என்பதில், கடந்த 25 ஆண்டுகளாக குழப்பம் நிலவி வருகிறது.
இதனால், தற்போதும் இச்சாலை மோசமான நிலையில் உள்ளது.
இதுகுறித்து ஊனமாஞ்சேரி பகுதி மக்கள் கூறியதாவது:
இரண்டு ஊராட்சிகளின் எல்லையாக இருந்தாலும், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் கீழ் தான், இந்த சாலை வருகிறது.
எனவே, ஒன்றிய கவுன்சிலர் அல்லது மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சாலையை சீரமைக்கலாம்.
தவிர, கலெக்டர் உத்தரவின்படி, வேறு பல திட்டங்களிலிருந்து நிதி ஒதுக்கி, சாலையை சீரமைக்க முடியும்.
ஆனால், ஊராட்சி எல்லை பிரச்னையை காரணமாகக் கூறி, அனைத்து தரப்பிலும் இச்சாலை புறக்கணிக்கப்படுகிறது.
இதனால், மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
தவிர, சாலையில் சிறு அளவிலான கற்கள் அதிகமாக உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது தொடர்கிறது.
சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால் நுாற்றாண்டாக கவனிக்கப்படாமல் உள்ள இந்த சாலையை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.