/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீரபோகத்தில் குடிநீர் கிணறு பணி நிறுத்தம் பொதுப்பணி துறையினர் முட்டுக்கட்டை
/
வீரபோகத்தில் குடிநீர் கிணறு பணி நிறுத்தம் பொதுப்பணி துறையினர் முட்டுக்கட்டை
வீரபோகத்தில் குடிநீர் கிணறு பணி நிறுத்தம் பொதுப்பணி துறையினர் முட்டுக்கட்டை
வீரபோகத்தில் குடிநீர் கிணறு பணி நிறுத்தம் பொதுப்பணி துறையினர் முட்டுக்கட்டை
ADDED : ஜூலை 28, 2025 01:43 AM

பவுஞ்சூர்:வீரபோகம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணிக்கு, பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளதால், கிராமத்தினர் அதிருப்தியடைந்து உள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்த வீரபோகம் ஊராட்சியில் பாக்கூர், வீரபோகம், பூஞ்சேரி, மணல்மேடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பாக்கூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலமாக பூஞ்சேரி, மணல்மேடு மற்றும் பாக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, கிராமத்தினருக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடைக் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணற்றில் போதிய தண்ணீர் இல்லாமல், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, கிராமத்தினர் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனால், பூஞ்சேரி ஏரியில் புதிய குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 16.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பூஞ்சேரி ஏரியில், 18.89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.
பணிகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், பொதுப்பணித் துறை தடையால், கடந்த சில வாரங்களாக கிணறு அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், கிராமத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் பருவமழை துவங்க உள்ளதால், ஏரியில் தண்ணீர் நிரம்பி, தற்போது தோண்டப்பட்டுள்ள கிணறும் துார்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவ மழைக்கு முன் குடிநீர் கிணறு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.