/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஸ்தலசயனர் கோவிலில் இடையூறு மரங்கள் அகற்றம்
/
ஸ்தலசயனர் கோவிலில் இடையூறு மரங்கள் அகற்றம்
ADDED : ஜன 19, 2024 12:57 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் நுழைவாயிலில், இடையூறாக இருந்த அரச மரம் அகற்றப்பட்டது.
மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. தற்போது சன்னிதிகள் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன.
பிப்., 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. சுற்றுச்சுவர் கட்டுமானத்திற்கு, கோவில் தோற்றத்திற்கு இடையூறாக மரங்கள் உள்ளன. கோவில் வளாக பிரதான நுழைவாயிலில் உள்ள, ராஜகோபுரத்திற்கான அடித்தள கல்காரம், அரச மரத்தால் சேதமடைகிறது.
சுற்றுச்சுவர் கட்டும்போது, அவசியம் கருதி, மரங்களை அகற்றியபோது, சிலர் எதிர்த்து, மரங்களை வெட்டவிடவில்லை. மரங்களை அகற்றுவது குறித்து, செங்கல்பட்டு கலெக்டரிடம், கோவில் நிர்வாகம் முறையிட்டது.
செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு, இடையூறாகவும், தேவையற்றும் உள்ள மரங்களை, உரிய அனுமதியுடன் வெட்ட அறிவுறுத்தினார்.
தற்போது மரங்கள் வெட்டப்படுகின்றன. நேற்று, நுழைவாயில் கல்கார பகுதி அரச மரத்தின் கிளைகளை முற்றிலும் வெட்டி, 'பொக்லைன்' இயந்திரம் மூலம், வேருடன் மரமும் அகற்றப்பட்டது.
அதை திருக்குள வளாகத்தில் நடுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காய்க்காத தென்னை, பிற இடையூறு மரங்கள் அகற்றப்படுகின்றன.

