/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
/
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் பழுது
ADDED : அக் 01, 2025 12:33 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், எரியாமல் உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
விபத்துகள் இந்த சாலையில், மறைமலை நகர் அடுத்த பேரமனுார் 'போர்டு' கார் தொழிற்சாலை எதிரே, பேரமனுார் சாலை சந்திப்பு உள்ளது.
பனங்கொட்டூர், பேரமனுார், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், தினமும் இந்த சாலை சந்திப்பைக் கடந்து மறைமலை நகர் சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, வேலைக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், கனரக வாகனங்களும், இந்த சந்திப்பு வழியாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு வந்து செல்கின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இந்த சந்திப்பில் கடந்த எட்டு மாதங்களில், 20க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது, இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகளும் சரியாக எரியாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சிரமம் இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னை - திண்டுக்கல் ஜி.எஸ்.டி., சாலையை விரிவாக்கம் செய்தது முதல், அனைத்து சந்திப்புகளிலும் விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
100 அடி வரை அகலமான சாலையாக உள்ளதால் முதியவர்கள், பெண்கள் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
தற்போது இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகளும் எரியாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
இருட்டில் மாடுகள் சாலையில் ஓய்வெடுப்பது தெரியாமல், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஜி.எஸ்.டி., சாலையில் எரியாமல் உள்ள உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.