/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீலமங்கலம் கிளியாறில் பாலம் அமைக்க கோரிக்கை
/
நீலமங்கலம் கிளியாறில் பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 06, 2025 11:54 PM

பவுஞ்சூர்:கிளியாற்றில் பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.
பவுஞ்சூர் அருகே நீலமங்கலம் கிராமத்தில் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் கிளியாற்றை கடக்கும் 60 மீ, நீளமுள்ள தரைப்பாலம் உள்ளது.
குன்னத்துார், நெல்வாய், சீவாடி, நீலமங்கலம் ஆகிய கிராம மக்கள் தரைப்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
தரைப்பாலம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் அதன் தடுப்பு துாண்கள் முற்றிலும் சேதமடைந்து, தற்போது தடுப்புத் துாண்கள் இல்லாத தரைபாலமாக உள்ளது.
மேலும் தரைப்பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டால் கிளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலத்திற்கு மேல் 5 முதல் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால், சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் கிராம மக்கள் 15 கி.மீ., துாரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள தரைப்பாலத்தை அகற்றி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.