மாம்பாக்கம் சந்திப்பில் நெரிசல் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
மாம்பாக்கம் சந்திப்பில் நெரிசல் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : மே 16, 2026 01:44 AM

திருப்போரூர்: மாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில், நான்கு முனை சந்திப்பு சாலை உள்ளது. சாலையின் கிழக்கில் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர். , செல்லும் சாலை, மேற்கில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் செல்லும் சாலை; வடக்கில் மேடவாக்கம் செல்லும் சாலை; தெற்கில் காயார் செல்லும் சாலைகள் உள்ளன.
நான்கு புறத்தில் இருந்தும் வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.
இதனால், கேளம்பாக்கம் மற்றும் காயார் சாலையிலிருந்து மேடவாக்கம் செல்லும் வாகனங்கள், சமத்துவபுரம் குடியிருப்பு அருகே திரும்பி, அதே இடத்திற்கு வந்து, மேடவாக்கம் சாலையில் சென்று வருகின்றன. வாகனங்கள் சுற்றும் தொலைவு, 3 கி.மீ., ஆகிறது.
அதேபோல், மேடவாக்கம் மற்றும் வண்டலுார் சாலையிலிருந்து காயார் சாலையில் செல்லும் வாகனங்கள், சோணலுார் சந்திப்பு பகுதியில் திரும்பி வந்து செல்வதால், 4 கி.மீ., கூடுதலாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
இதனால், 20 அடியில் கடக்க வேண்டிய சாலையை, 4 கி.மீ., சுற்றி வந்து கடப்பதால், நேர விரயம் ஏற்படுவதுடன், எரிபொருளும் வீணாகிறது. அதேபோல் 'பீக்ஹவர்ஸ்' நேரத்தில், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, மாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பில், மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
