/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கேளம்பாக்கம் ஆறுவழி சாலையில் வேக தடுப்பு அமைக்க கோரிக்கை
/
கேளம்பாக்கம் ஆறுவழி சாலையில் வேக தடுப்பு அமைக்க கோரிக்கை
கேளம்பாக்கம் ஆறுவழி சாலையில் வேக தடுப்பு அமைக்க கோரிக்கை
கேளம்பாக்கம் ஆறுவழி சாலையில் வேக தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2025 02:04 AM

திருப்போரூர்:கேளம்பாக்கம் ஆறுவழிச் சாலையில் விபத்தை தடுக்க, வேகத்தடுப்பு அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை, ஆறுவழிப் பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்குவழிப் பாதையாக உள்ளது.
இதனால் படூர், கேளம்பாக்கம், திருப்போரூரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
எனவே, சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, ஆறுவழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதில், முதல்கட்டமாக படூர் மற்றும் தையூர் இடையிலான புறவழிச் சாலை, 4.6 கி.மீ.,க்கும், திருப்போரூர் மற்றும் ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை 7.4 கி.மீ.,க்கும் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு புறவழிச் சாலைகளுக்கும் மொத்தம், 465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், படூர் மற்றும் தையூர் இடையிலான புறவழிச்சாலையான ஆறுவழிச் சாலையில், கேளம்பாக்கம் பேருந்து நிலையம், மாதாகோவில், கால்நடை மருந்தகம், விளையாட்டுத்திடல், வணிக கடைகள், குடியிருப்புகளுக்கு செல்லும் முக்கிய உள்சாலையானது வலது, இடது என, இருபுறம் பிரிந்து செல்கிறது.
இவ்வாறு பிரிந்து செல்லும் இச்சாலை சந்திப்பு அருகே, மேம்பாலம் உள்ளது.
இந்த ஆறுவழிச் சாலையில் மேம்பாலத்திலிருந்து படூர் நோக்கி, வாகனங்கள் வேகமாக செல்கின்றன. அதேபோல், படூரிலிருந்து கேளம்பாக்கத்தை நோக்கியும், வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
அப்போது, உள்சாலையிலிருந்து ஆறுவழிச் சாலைக்கு வரும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இதனால், அனைவரும் ஒருவித அச்சத்துடனேயே சாலையைக் கடந்து செல்கின்றனர்.
எனவே, கேளம்பாக்கம் ஆறுவழிச்சாலை சந்திப்பு பகுதியில் வாகனங்கள் வேகத்தை குறைத்து மெதுவாக செல்லும் வகையில், நிரந்தர வேகத்தடுப்பு, உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதே சாலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம், கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று மாணவியர், ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர்.