பூட்டி கிடக்கும் கிராமப்புற நுாலகங்களை திறக்க கோரிக்கை
பூட்டி கிடக்கும் கிராமப்புற நுாலகங்களை திறக்க கோரிக்கை
ADDED : மார் 11, 2026 05:16 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள நுாலகங்கள் பூட்டியே கிடப்பதால் புத்தகங்கள் வீணாகி, வாசகர்களிடையே வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், அச்சிறுப்பாக்கம், திருக்கழுகுன்றம், மதுராந்தகம், திருப்போரூர், புனிய தோமையார் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகளில், 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் ஊராட்சிக்கு ஒரு நுாலகம் என கடந்த, 2010ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நுாலகங்கள் அமைக்கப்பட்டன.
கிராமபுற மக்கள் மற்றும் பள்ளி மாணவ -- மாணவியரிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பொது அறிவு, நாளிதழ் உள்ளிட்டவை இந்த நுாலகங்களில் இடம் பெற்றிருந்தன.
இந்த நுாலகங்கள் துவங்கப்பட்ட சில ஆண்டுகள் முறையாக இயங்கி வந்த நிலையில் தற்போது பல கிராமங்களில் பூட்டியே உள்ளன. பூட்டிய கட்டடத்தில் நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் வீணாகி வருகின்றன. பல ஊராட்சிகளில் மின்வாரிய அலுவலகம், ரேஷன் கடை போன்றவைகளாக செயல்பட்டு வருகின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள நுாலகங்களை முறையாக காலை 10:00 மணி முதல் மாலை வரை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
