/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்சிப்பொருளான ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
காட்சிப்பொருளான ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
காட்சிப்பொருளான ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
காட்சிப்பொருளான ரேஷன் கடை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 01:05 AM

சித்தாமூர்:விளாங்காடு கிராமத்தில், மின் இணைப்பு இல்லாததால், காட்சிப்பொருளாக உள்ள புதிய ரேஷன் கடையை செயல்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே விளாங்காடு ஊராட்சியில், 1,300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அரசு பள்ளி வளாகத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடத்தில், ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. நாளடைவில் கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மேல் தளத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மோசமான நிலையில் இருந்தது.
இதனால், மழைக்காலத்தில் ரேஷன் கடையில் தண்ணீர் புகுந்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் நனைந்தன. இதனால், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து, 2023 - 24ம் ஆண்டு, செய்யூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பழைய ரேஷன் கடை அருகே, புதிய ரேஷன் கடை கட்டடம் அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் துவக்கி வைக்கப்பட்டது.
ஆனால், கட்டடத்திற்கு மின் இணைப்பு இல்லாததால், கடந்த நான்கு மாதங்களாக, ரேஷன் கடை செயல்படாமல், காட்சிப்பொருளாகவே உள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது வினியோகத் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, செயல்படாமல் உள்ள புதிய ரேஷன் கடை கட்டடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.