/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானாம்பதிக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க கோரிக்கை
/
மானாம்பதிக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 08, 2025 02:08 AM
திருப்போரூர்:மானாமதிக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில், 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, அதிக அளவில் மாணவர்கள் வருகின்றனர்.
இங்கிருந்து சென்னை அடையாறு, தாம்பரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய முக்கிய பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழக பேருந்துகளும், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மானாமதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சென்னை போன்ற புறநகர் பகுதிகளில் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
மானாமதி - அடையாறு தடத்தில், தடம் எண் '102எக்ஸ்' மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு, முன்னாள் எம்.எல்.ஏ., தண்டரை மனோகரன், மேற்கண்ட மானாமதி - அடையாறு தடத்தில், காலை மற்றும் மாலையில் கூடுதல் சேவைகளை துவக்க நடவடிக்கை எடுத்தார்.
ஆனால், 2020 மார்ச்சில், கொரோனா தொற்றுக்குப் பின், கூடுதல் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
தற்போது, இப்பகுதியில் வசிப்போருக்கு, கூடுதல் பேருந்து சேவை தேவைப்படுகிறது.
இதுகுறித்து, பயணியர் கூறியதாவது:
கூடுதல் பேருந்துகள் இல்லாததால், மானாமதியில் பேருந்து புறப்படும் போதே, பயணியர் கூட்டம் நிரம்பி வழிகிறது. போதுமான இருக்கை இல்லாத காரணத்தால் முதியோர், பெண்கள், மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, அடையாறில் இருந்து மானாமதிக்கு கூடுதல் பேருந்து சேவை துவக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.