/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் -- ஒரகடம் தடத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டுகோள்
/
மறைமலை நகர் -- ஒரகடம் தடத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டுகோள்
மறைமலை நகர் -- ஒரகடம் தடத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டுகோள்
மறைமலை நகர் -- ஒரகடம் தடத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டுகோள்
ADDED : மே 14, 2025 12:21 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் -- ஒரகடம் 14 கி.மீ., துாரம் உடையது. இந்த தடத்தில் பேரமனுார், சட்டமங்கலம், பாளையம், ஆப்பூர், சேந்தமங்கலம் கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, சென்று வருகின்றனர்.
அதேபோல மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிகளுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர்.
மேலும், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, பலர் வேலைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த தடத்தில் பேருந்து, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இல்லை.
இதனால் பள்ளி மாணவ - மாணவியர், வேலைக்குச் செல்லும் பெண்கள் நடந்து செல்லும் நிலைமை உள்ளது.
மேலும் அவசரத்திற்கு, அந்த வழியாகச் செல்லும் முன் பின் தெரியாதவர்களின் வாகனங்களில்,'லிப்ட்' கேட்டுச் செல்ல வேண்டிய நிலை, பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இதனால், பல்வேறு வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த தடத்தில் சிற்றுந்துகள் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வேலைக்கு குறித்த நேரத்தில் செல்ல பேருந்து வசதி இல்லாததால், தினமும் சிரமப்பட வேண்டியுள்ளது. ஷேர் ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்களும் இப்பகுதியில் இயக்கப்படாததால், பல ஆண்டுகளாக தவித்து வருகிறோம்.
இந்த தடத்தில் சிற்றுந்துகள் இயக்கினால், அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருக்கும். இப்பகுதிவாசிகள் நலன் கருதி, சிற்றுந்துகள் இயக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.