சாலையில் குவிக்கப்பட்ட மண் அப்புறப்படுத்த வேண்டுகோள்
சாலையில் குவிக்கப்பட்ட மண் அப்புறப்படுத்த வேண்டுகோள்
ADDED : பிப் 20, 2026 05:48 AM

செங்கல்பட்டு: வேதாசலம் நகரில், மழைநீர் கால்வாய் துார்வாரிய மண்ணை அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு வேதாசலம் நகர் மையப்பகுதியாக உள்ளது. இங்கு, வரதனார் தெரு, ஏகாம்பரனார் தெரு, தேவராஜன் தெரு உள்ளிட்ட தெருக்களில், மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்நகரில், தலைமை தபால் நிலையம், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கடைகள் உள்ளன. இப்பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
மழைநீர் கால்வாய் துார்வரப்படாமல் கிடந்தது. மழைக்காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, சாலையில் வழிந்தோடுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால், மழைநீர் கால்வாய் துார்வாரி, கட்டவேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன்பின், மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவங்கி, கால்வாய் கட்டுமான பணி நடந்து வருகிறது.
கால்வாயில் துார்வாரிய மண்ணை சாலையிலேயே குவிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள், பாதாசாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதை தவிர்க்க சாலையில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை உடனுக்குடன் அப்புறப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
