ADDED : பிப் 10, 2026 06:16 AM

செய்யூர்: செய்யூரில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு கல்லுாரியின், அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் சால்ட் ரோடு பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடையில், இரவு நேரத்தில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
அங்கு வருவோர் காலியான மதுபாட்டில் களை சாலையில், வீசி செல்கின்றனர்.
மேலும் மது போதையில், சாலையின் நடுவில் நின்று ஒருவரை ஒருவர், தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் அவ்வப்போது சிறு விபத்துக்களும் நடக்கிறது.
இவ்வழியே பெண்கள், சிறுவர்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில், 3 தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ - மாணவியர் அந்த சாலை வழியாக கடந்து செல்கின்றனர்.
மேலும் செய்யூரில் புதிதாக அரசு கலைக் கல்லுாரி கட்டப்பட்ட உள்ளது. அதன் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
