/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செண்டிவாக்கம் குளத்தை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
/
செண்டிவாக்கம் குளத்தை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 04, 2025 09:45 PM
மேல்மருவத்துார்:செண்டிவாக்கம் கிராமத்தில் உள்ள பொது குளத்தை, துார் வாரி சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியம், செண்டிவாக்கம் ஊராட்சியில், சோத்துப்பாக்கம் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையோரம், 12 ஆண்டுகளுக்கு முன், இரண்டு ஏக்கரில் பொது குளம் வெட்டப்பட்டது.
மத்திய தொழிலாளர் மற்றும் புள்ளியில் துறை அமைச்சரின் நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் செலவில் இப்பணிகளை முடித்து, ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, குளத்திற்கு தண்ணீர் வரும் வழி, வெளியேறும் வழிகள், படிக்கட்டு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
குளத்தில் நான்கு பக்க சுற்றுச்சுவரும், சில இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. எனவே, குளத்தை துார் வாரி, நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் சகாதேவன், 35, என்பவர் கூறியதாவது:
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, பல லட்சம் ரூபாய் செலவில் வெட்டப்பட்ட இந்த குளத்தின் நீர்வழிப் பாதைகள் துார்ந்துள்ளன.
இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் வருவது தடைபட்டு, சிறிதளவே குளத்தில் தண்ணீர் தேங்குகிறது.
தற்போது, குளத்தில் தண்ணீர் குறைந்து உள்ளது.
எனவே, இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையை சீரமைத்து, துார் வாரி சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.