/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னேரி ஏரி கால்வாய் பாலத்தை சீரமைக்க கோரிக்கை
/
சென்னேரி ஏரி கால்வாய் பாலத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2025 11:32 PM

அச்சிறுபாக்கம், சென்னேரி பெரிய ஏரியிலிருந்து சித்தேரிக்கு நீர் செல்லும் பாலத்தை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தியில் இருந்து, திண்டிவனம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையை அனந்தமங்கலம், வடமணிப்பாக்கம், சிறுதாமூர், தின்னலுார், வைரபுரம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதில், கடந்தாண்டு பெய்த பருவமழை காரணமாக, சிறுதாமூர் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னேரி கிராமத்திற்குச் சொந்தமான பெரிய ஏரியிலிருந்து, சித்தேரிக்கு தண்ணீர் செல்லும் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முற்றிலும் நாசமாகின.
நெடுஞ்சாலைத் துறையினர், தற்காலிகமாக பாலத்தில் மண் கொட்டி, போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
தற்போது, சேதமான பாலத்தை சீரமைக்காமல், கடந்த 6 மாதங்களுக்கு முன், புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னேரி பெரிய ஏரியிலிருந்து சித்தேரிக்கு நீர் செல்லும் பாலத்தில் மண் கொட்டி துார்க்கப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை மற்றும் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து, பாலத்தை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.