ADDED : ஏப் 06, 2026 10:36 PM

கூவத்துார்:வடபட்டினம் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் அருகே வடபட்டினம் ஊராட்சி உள்ளது. இங்கு வடபட்டினம், நடுக்குப்பம், காட்டுக்காலனி போன்ற பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். நடுக்குப்பத்ததில் மட்டும் மதுரைவீரன் தெரு, சிங்கார வேலர் தெரு, விவேகானந்தர் தெரு, பாப்பத்தியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட தெருக்களில் 150 மீனவ கும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள எம்.ஜி.ஆர்., தெரு சந்திப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மின்கம்பம் ஒன்று சிமென்ட் காரைகள் உதிர்ந்தபடி, கம்பிகள் வெளியில் நீட்டி உள்ளன. கடற்கரை பகுதி என்பதால் காற்றாடிக்கும் நேரங்களில் மின்கம்பம் எப்போது வேண்டுமானலும் விழலாம் என்ற அச்சத்துடனேயே வயதானவர்கள், குழந்கைள், பெரியோர் சென்று வருகின்றனர்.
கோடைகாலம் என்பதால் ஏற்கனவே மின்சாரம் தடைபட்டு வரும் சூழலில் மின்கம்பம் விழுந்து விபரீதம் ஏதேனும் ஏற்படும் முன், மின்கம்பத்தை மாற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
