/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் அரசு கல்லுாரி துவக்க பகுதிவாசிகள்...எதிர்பார்ப்பு!:வரும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க கோரிக்கை
/
செய்யூரில் அரசு கல்லுாரி துவக்க பகுதிவாசிகள்...எதிர்பார்ப்பு!:வரும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க கோரிக்கை
செய்யூரில் அரசு கல்லுாரி துவக்க பகுதிவாசிகள்...எதிர்பார்ப்பு!:வரும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க கோரிக்கை
செய்யூரில் அரசு கல்லுாரி துவக்க பகுதிவாசிகள்...எதிர்பார்ப்பு!:வரும் சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க கோரிக்கை
ADDED : பிப் 05, 2025 09:11 PM
செங்கல்பட்டு:செய்யூரில், அரசு கலைக்கல்லுாரி துவக்க, வரும் சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட தலைநகர் செங்கல்பட்டில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி, கடந்த 1970ம் ஆண்டு துவக்கப்பட்டு, இயங்கி வருகிறது.
இந்த கல்லுாரியில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு 990 இடங்கள் உள்ளன. ஆனால், ஆண்டுதோறும் 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கின்றனர். கடந்த இரு கல்வியாண்டில், 12,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த கல்லுாரியில் இடம் கிடைக்காதவர்கள், தனியார் கல்லுாரிகளில் சேருகின்றனர். இதனால், பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவ - மாணவியர் உயர் கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளது.
குறிப்பாக, மாவட்டத்தில் கடைக்கோடியாக உள்ள செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உயர் கல்வி படிக்க, செங்கல்பட்டு அரசு கலைக்கல்லுாரியை மட்டுமே நம்பி உள்ளனர்.
இடம் கிடைக்காதோர் வேறு வழியின்றி மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதியில் உள்ள தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
இதில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் படிக்க முடியாமல், தனியார் நிறுவனங்களில் பணிக்கு சேரும் அவலம் தொடர்ந்து வருகிறது.
ஏழை மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை தடுக்க, செய்யூர் பகுதியில் அரசு கல்லுாரி துவக்க வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த 2022ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், ''ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்படும்,'' என, அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
இதையடுத்து, செய்யூரில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க, செய்யூர் வருவாய்த் துறையினர் அரசுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்தனர்.
இதுதொடர்பாக, உயர் கல்வித் துறைக்கும் வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், கல்லுாரி துவங்க உயர்கல்வித் துறையில் இருந்து எந்த தகவலும் வராததால், இடம் தேர்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில், அரசு கலைக் கல்லுாரிகள் இல்லை.
குறிப்பாக, மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய வட்டாரங்களில், 30 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் 1,628 பேர், மாணவியர் 1,871 பேர் என, மொத்தம் 3,499 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
எனவே, செய்யூர் சட்டசபை தொகுதியில் அரசு கலைக்கல்லுாரி துவக்க, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'செய்யூர் பகுதியில், அரசு கலைக்கல்லுாரி அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
செய்யூர் தாலுகாவில், விவசாய தொழிலாளர்களின் பெண் குழந்தைகள், வெளியிடங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். அரசு கலைக்கல்லுாரி அமைந்தால், குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் பயில வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்கு நேர விரயம் குறைந்து, அரசு பணிகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.
-எல்.எஸ்.ரவீந்திரநாத்,
சேம்புலிபுரம், செய்யூர்.

