ADDED : மார் 29, 2026 10:24 PM

கூவத்துார்:சாலை அமைக்கும் பணி துவங்கிய கையோடு நிறுத்தப்பட்டது.
கூவத்துார் ஊராட்சியில் மேலாண்டை தெரு, தென்மாட வீதி, கீழாண்டை தெரு என பல பகுதிகளில், 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள மலையூர் காலனி செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது. அதையடுத்து, சாலைகள் அமைக்கப்படாதால், சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தன. மேலும், சாலை மேடாக இருந்ததால், சாலையை பயன்படுத்தும் மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், மக்கள் என, பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அங்குள்ள 120 மீட்டர் சாலைக்கு சிமென்ட் கல் அமைக்கும் பணி துவங்கின.
அதற்காக, சாலையின் இருபுறமும் பலகை அமைக்கும் பணியும், ஜல்லிக்கலவை ஏற்பாடு செய்யும் பணிகள் துவங்க ஆரம்பித்தன.
இந்நிலையில் அங்குள்ள மக்கள் மேடாக இருக்கும் சாலையை ஒரே சமதளப்படுத்தி, சீராக போட வேண்டும் என்று கூறினர்.
அதையடுத்து தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலுக்கு பின், மேடாக உள்ள சாலையை சீர்படுத்தி, சாலை அமைக்கப்படும் என ஊராட்சி தலைவர் உறுதியளித்ததையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டன.
