/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓதியூர் ஏரியில் சாலை அமைப்பு சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு
/
ஓதியூர் ஏரியில் சாலை அமைப்பு சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு
ஓதியூர் ஏரியில் சாலை அமைப்பு சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு
ஓதியூர் ஏரியில் சாலை அமைப்பு சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மார் 12, 2024 09:01 PM

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்புநீர் ஏரி உள்ளது.
ஓதியூர் ஏரி நடுவே, 900 மீட்டர் நீளத்திற்கு சாலை ஏற்படுத்தப்பட்டு, இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் சி.ஆர்.இசட்.,டின் கீழ் வரும் ஓதியூர் ஏரியில், அனுமதி பெறாமல் ஏரியின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், ஓதியூர் ஏரியில் நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீரோட்டம் பாதிக்காத வகையில், ஓதியூர் ஏரியின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாலங்கள் வாயிலாக, தடையின்றி நீரோட்டம் உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர், நேற்று நேரில் ஆய்வு செய்து, மழைக்காலங்களில் ஏரியின் நீரோட்டம் மற்றும் ஏரி நடுவே அமைக்கப்பட்டுள்ள சாலையால் ஏரியின் நீரோட்டத்திற்கு பாதிப்பு உள்ளதா என, அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தனர்.
இ.சி.ஆர்., சாலையை விரிவாக்கம் செய்வதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஓதியூர் ஏரியில் மஞ்சள் நிற அடையாளக்கல் நடப்பட்டது.
ஓதியூர் ஏரியில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளக்கூடாது என, சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைக்கு பின், ஓதியூர் ஏரியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளக்கூடாது என, கடந்த சில மாதங்களுக்கு முன், பசுமை தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏரியை பாதிக்காத வகையில், சாலையின் கிழக்குப் பகுதியில், 400 மீட்டர் நீளத்திற்கு கூடுதல் இடம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டு, தற்போது சாலையின் கிழக்குப் பகுதியில் விரிவாக்கப்பணி துவங்கப்பட்டு, சில நாட்களாக நடந்து வருகிறது.

