/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பெயரை சொல்லி... கொள்ளை: காஞ்சி உள்ளாவூர் ஏரிகளில் மண் அள்ள தடை
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பெயரை சொல்லி... கொள்ளை: காஞ்சி உள்ளாவூர் ஏரிகளில் மண் அள்ள தடை
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பெயரை சொல்லி... கொள்ளை: காஞ்சி உள்ளாவூர் ஏரிகளில் மண் அள்ள தடை
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பெயரை சொல்லி... கொள்ளை: காஞ்சி உள்ளாவூர் ஏரிகளில் மண் அள்ள தடை
ADDED : அக் 06, 2025 01:33 AM

காஞ்சிபுரம்,:கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிக்கு எனக்கூறி, காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரியில் அதிக ஆழம், அதிக பரப்பில் மண் எடுத்து, ஒப்பந்ததாரர் முறைகேடு செய்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, மண் எடுக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில், உள்ளாவூர் கிராமம் உள்ளது. இங்கு, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், சிற்றேரி மற்றும் பெரிய ஏரி என, இரு ஏரிகள் உள்ளன.
இந்த இரு ஏரிகளிலும், செப்., முதல் அக்., 31ம் தேதி வரை மண் எடுக்க, நீர்வளத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மண், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் ரயில் வழித்தட பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, 88 ஏக்கர் பரப்பளவு கொண்ட சிற்றேரியில், 1 ஏக்கர் பரப்பளவில், 5,715 கன மீட்டருக்கு சாதாரண மண்ணை எடுத்துக் கொள்ளலாம் என, கனிம வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
அரசு நிர்ணயம் செய்த அளவில்தான் மண் எடுக்கப்படுகிறதா என, நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று, அனுமதி ஆணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முறைகேடு
இதன்படி, டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் வாயிலாக மண் அள்ளி, கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிக்கு அனுப்பப்பட்டு வந்தது.
ஆனால், அரசு நிர்ணயம் செய்த அளவை காட்டிலும், ஒப்பந்ததாரர் கூடுதல் பரப்பளவு மற்றும் அளவுக்கு அதிகமான ஆழத்திற்கு மண்ணை அள்ளி உள்ளார்.
குறிப்பாக, 1 ஏக்கர் பரப்பளவுக்கு பதிலாக, 25 ஏக்கர் பரப்பளவில் மண்ணை அள்ளியுள்ளனர். தவிர, 1 மீட்டர் ஆழம், அதாவது 3.28 அடி ஆழத்தில் மண் எடுப்பதற்கு பதிலாக, 18 அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்து, முறைகேடு நடந்துள்ளது.
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிக்கு எனக்கூறி, இஷ்டம்போல் மண் கொள்ளை நடந்துள்ளதும், வேறு இடங்களுக்கு மண் கடத்தி, ஒப்பந்ததாரர் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளாவூர் கிராம மக்கள் கூறியதாவது:
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிக்கு எனக்கூறி, ஏரிகளில் மண் கொள்ளை நடந்துள்ளது. விதிமுறைகளை மீறி, இஷ்டம்போல் பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர்.
தினமும் 2,000 லோடு டிப்பர் லாரிகளில் மண்ணை அள்ளி செல்கின்றனர். இதில், குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளே ரயில் வழித்தட பணிக்கு சென்றிருக்கும்.
பெரும்பாலான கனரக லாரிகளில் மண்ணை கடத்தி, தனியாருக்கு விற்பனை செய்து, கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இரவு, பகல் என பாராமல் இடைவிடாமல் மண் கொள்ளை நடக்கிறது.
அபாயம்
ஏரிக்கரை மற்றும் நீர்வரத்துக் கால்வாய் ஆகிய பகுதிகளை சேதப்படுத்தக் கூடாது என, விதிமுறைகள் உள்ளன. ஆனால் கரைகளை சேதப்படுத்தி உள்ளனர். சிற்றேரியில் இருந்து, பெரிய ஏரிக்கு லாரி வழித்தடத்தை ஏற்படுத்தி, விதிகளை மீறி மண் அள்ளப்பட்டுள்ளது.
இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. மேலும், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
விதிகளை மீறி நடக்கும் மண் கொள்ளைக்கு, 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகளை சந்தித்து முறைகேடு குறித்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நீர் வளம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உள்ளாவூர் ஏரியில் மண் அள்ளும் பணியை நிறுத்தி உள்ளோம். மேலும், சேதம் ஏற்படுத்திய ஏரிக்கரையை சீரமைக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக தோண்டிய ஆழத்தை சீராக மூட வேண்டும் என, ஒப்பந்தம் எடுத்தவருக்கு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.