/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3,315 விவசாயிகளுக்கு ரூ.3.33 கோடி ஒதுக்கீடு
/
3,315 விவசாயிகளுக்கு ரூ.3.33 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 20, 2025 12:08 AM

காஞ்சிபுரம், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு, 498 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3,315 விவசாயிகளுக்கு, 3.33 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த நிவாரண தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சமயத்தில், புயல் உருவாகி, அதன் வாயிலாக பெய்யும் கனமழையால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், நெற்பயிர்கள், கரும்பு, தோட்ட பயிர்கள், நீண்ட கால பயிர் என, அனைத்து வகை விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புயலால் ஏற்படும் பாதிப்பை, விவசாயிகளால் சமாளிக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இறுதியிலும், டிசம்பர் துவக்கத்திலும் பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடலோர மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி போன்ற உள்மாவட்டங்களிலும் அதி கனமழை காரணமாக, வீடுகள் சேதமானது மட்டுமல்லாமல், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, டிசம்பர் மாதம் முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாய சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டங்களில், பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் சமயத்தில், பரந்துார், வட்டம்பாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் நெற்பயிர்கள் நாசமாகின. இதுகுறித்து, வேளாண் துறையும், வருவாய் துறையும் இணைந்து, பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் ஆய்வு நடத்தி, பாதிப்பு விபரங்களை கணக்கிட்டனர்.
மாவட்டம் முழுதும், ஐந்து தாலுகாக்களில் நெல், தோட்டப்பயிர் பாதிப்பு விபரங்களை, கலெக்டர் கலைச்செல்வி, அரசுக்கு அறிக்கையாக அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளில், 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 7.7 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு, 498 கோடி ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதில், காஞ்சிபுரம் மாவட்ட நெற்பயிர் விவசாயிகள் 2,783 பேரின், 42,768 ஏக்கர் நிலத்திற்கு, 3.03 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல், தோட்டக்கலை விவசாயிகள் 532 பேருக்கு, 408 ஏக்கர் விளைநிலங்களுக்கு, 30.18 லட்சம் ரூபாய் என, மொத்தம் 3,315 விவசாயிகளுக்கு, 3.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானாவாரி பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8,500 ரூபாயும், நெற்பயிர் மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 17,000 ரூபாயும், நீண்டகால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 22,500 ரூபாய் நிவாரணம் என்ற அடிப்படையில், விரைந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த நிவாரண நிதியை, தங்களது வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மேலாண்மை துறை அல்லது வேளாண் துறை வாயிலாக இதற்கான பணிகள் துரிதப்படுத்தி, விரைவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாவட்ட வருவாய் துறை அதிகாரி, காஞ்சிபுரம்.