/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தரமற்ற சாலைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வீணடிப்பு ... இதற்கு இவ்வளவா?:செங்கை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
தரமற்ற சாலைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வீணடிப்பு ... இதற்கு இவ்வளவா?:செங்கை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
தரமற்ற சாலைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வீணடிப்பு ... இதற்கு இவ்வளவா?:செங்கை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
தரமற்ற சாலைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வீணடிப்பு ... இதற்கு இவ்வளவா?:செங்கை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : அக் 29, 2025 10:30 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உட்புற சாலைகள், தெரு சாலைகள் மழையால் சின்னாபின்னமாகி உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். லஞ்சம், ஊழல் காரணமாக, தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டு, ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாக, பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகரின் நுழைவாயில்களில் ஒன்றான செங்கல்பட்டு மாவட்டத்தில், எட்டு தாலுகாக்கள் மற்றும் எட்டு ஒன்றியங்கள் உள்ளன.
இதில் ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், ஆறு பேரூராட்சிகள் மற்றும் 359 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில், 40,000க்கும் மேற்பட்ட தெருக்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன. தவிர, இ.சி.ஆர்., சாலை, ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் -- கேளம்பாக்கம் ஆகிய பிரதான சாலைகளும் உள்ளன.
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், 70 சதவீத உட்புற சாலைகள் கடும் சேதமடைந்து, சின்னாபின்னமாகி, நடப்பதற்கே லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளன.
இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல், காலதாமதம் ஏற்படுகிறது.
உட்புற சாலைகள் அமைக்க ஒதுக்கப்படும் நிதியில், 40 சதவீதம், 'கமிஷன், கரெப்ஷன், கலெக் ஷன்' என்ற முறையில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை செல்வதால், சாலைகள் உரிய தரமின்றி அமைக்கப்பட்டு, ஒரே ஆண்டில் பல்லிளிப்பதாக, பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த வகையில், ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வரையிலும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போது, ஊராட்சிகளின் உட்புற சாலைகள் கான்கிரீட், தார் மற்றும் 'பேவர் பிளாக்' சாலைகளாக அமைக்கப்படுகின்றன.
இதில் 'பேவர் பிளாக்' சாலை மட்டுமே, ஓரளவு தாக்கு பிடிக்கிறது. மாறாக 'தார்' மற்றும் கான்கிரீட் ஆகியவற்றால் அமைக்கப்படும் சாலைகள், ஓராண்டிற்குள் சிதைந்து விடுகின்றன.
சாலை அமைக்க அரசால் ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு, 40 சதவீதம் கமிஷனாக செல்வதால், மீதமுள்ள 60 சதவீத தொகையில் தான், சாலை அமைக்கப்படுகிறது.
ஒரு தெருவில் 100 மீ., துாரத்தில், 15 அடி அகலத்தில் தார்ச்சாலை அல்லது கான்கிரீட் சாலை அமைக்க, 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டால், அதில் ஆறு லட்சம் ரூபாய்க்கு முறைகேடு நடப்பதால், மீதமுள்ள 9 லட்சம் ரூபாயில் தான் சாலை அமைக்கப்படுகிறது.
சாலை தரமாக அமைக்கப்பட்டு உள்ளதா என, பகுதி மக்களிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே, ஒப்பந்ததாரருக்கு உரிய நிதியை அளிக்க வேண்டும்.
ஆனால், இந்த ஒப்புதலை அதிகாரிகளே வழங்குகின்றனர். இதுவே, ஊழலுக்கு முதல் காரணமாக உள்ளது. அமைக்கப்படும் சாலைகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமாக, 20 ஆண்டுகளை நிர்ணயித்து ஒப்பந்தங்களை வழங்க வேண்டும்.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில், 100 மீ., சாலையைக் கூட தரமாக அமைக்க முடியவில்லை. சிறு மழைக்கே சேதமடையும் சாலைகளால், பொதுமக்களின் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்பட்டு வருகிறது.
செங்கை மாவட்டத்தில், உட்புற சாலைகளை அமைக்க, ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்படுகிறது.
சாலைகள் தரமின்றி அமைக்கப்படுவதற்கு ஊழல், லஞ்சம் இவையே காரணம். இதனால், மீண்டும் மீண்டும் சாலைகள் அமைக்கப்பட்டு, சாலை மட்டத்தை விட குறைவான உயரத்திற்கு, வீடுகள் பள்ளத்தில் செல்கின்றன.
இந்த நிலை நீடித்தால், அடுத்த 10 ஆண்டுகளில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளும், சாலை மட்டத்தை விட குறைவான உயரத்திற்கு செல்லும்.
சிறு மழை பெய்தால் கூட, வீடுகளுக்குள் நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
எனவே, ஒதுக்கப்படும் நிதியில் தரமான சாலை அமைக்கப்படுவதை கண்காணிக்க, அந்த சாலையை தர நிர்ணயம் செய்ய, பொது மக்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். அத்துடன், மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் உரிமையை ரத்து செய்யவும், அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

